ஒற்றைப் பத்தி : பவுத்தமும் - மனுதர்மமும்!

புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரமாக்கி புத்தரின் - ஆரிய வருணாசிரம சனாதன எதிர்ப்பை ஆரியம், 'சுவாகா' செய்தது இரண்டாம் கட்டம்.


முதற்கட்டம் - ஆரியம் புத்தரை - பவுத்தர்களை எந்த கண்கொண்டு பார்த்தது - எப்படியெல்லாம் குரூரமாகக் கொச்சைத்தனமாகக் கூறியுள்ளது என்பதற்கு - மனுதர்மத்திலிருந்தே எடுத்துக்காட்டைக் கூற முடியும்.


''வேத பாகியாளரான சாக்கியர்கள், செய்யத் தகாத காரியஞ் செய்கிறவர்கள், பூனையைப் போல் வேடங்கொண்டு பிறரை வஞ்சிப்பவர்கள், வேதத்தை நம்பாதவர்கள், வேதாந்த விரோதமான தர்க்க யுக்திகளைச் சொல்லுகிறவர்கள், கொக்குபோல் மோசக் கருத்துள்ளவர்கள் இவர்கள் அதிதி பூஜாகாலத்தில் வந்தாலும், வாயினாலும் பூசிக்கலாகாது.'' (மனுஸ்மிருதி அத்தியாயம் 4; சுலோகம் 30).


சாக்கியர்கள் என்றால் பவுத்தர்கள்.


வேதபாகியாளர் என்றால் வேதத்தை எதிர்ப்பவர்கள் என்று பொருள்.


பஞ்ச சீலத்தைப் பாருக்கெல்லாம் வழங்கிய அறநெறிக் கொள்கையின் அரும்பெரும் செல்வரான கவுதம புத்தரை - அவரைச் சார்ந்தவர்களை பூனையைப் போல் வேடங் கொண்டவர்கள் என்றும், வஞ்சனைக்காரர்கள் என்றும், கொக்குபோல் மோசக் கருத்துள்ளவர்கள் என்றும் மனுதர்ம நூல் கூறுவதைக் கவனியுங்கள் - கவனியுங்கள்!


ஏன் அவ்வளவு வெறுப்பு - அந்த சுலோகங்களிலேயே அதற்கான காரணம் இருக்கிறது - வேதங்களை எதிர்ப்பவர்கள் தர்க்கம் செய்பவர்கள். எனவேதான் இவ்வளவுக் கீழ்த்தரமாக மனுதர்மம் பவுத்தர்களைக் கொச்சைப்படுத்துகிறது.


திருடனும், புத்தனும் ஒன்றாவான் - வேத எதிர்ப்பாளன் என்று வால்மீகி இராமாயணம் - அயோத்தியா காண்டம் சுலோகம் 1502 இதே மனுதர்மக் கருத்தைக் கூறுவதைக் கவனியுங்கள்!


திருடனே 'திருடன், திருடன்' என்று கூவிக் கொண்டு ஓடித் தப்புகிறவனுக்கும், இந்தப் பார்ப்பனர்களுக்கும் வேறுபாடும் உண்டோ!


 - மயிலாடன்


Comments