'வாழ்வியல் சிந்தனைகள்' சில எண்ணங்கள்...

ஆசிரியர் அய்யா அவர்களின் 'வாழ்வியல் சிந்தனைகள்' பற்றி எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள  விரும்புகிறேன். அய்யாவின் ஆழ்த்த அறிவு, சொல்வன்மை, மொழியாளுகை மற்றும் நேர்த்தியான எழுத்துக்கு எடுத்துக்காட்டு 'வாழ்வியல் சிந்தனைகள்'. ஒவ்வொரு கட்டுரையிலும் அக்கட்டுரையின் கருவினை அறிமுகம் செய்யும் பாங்கு, எண்ணக் கோர்வை, சொல்வன்மை - இவற்றை திருவள்ளுவரின் ஏழு சொற்களில் அடக்கி விடலாம்.


கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்


வேட்ப மொழிவதாம் சொல் (குறள் 643)


இங்கு 'வேட்பமொழிவது' என்பது அய்யாவின் எழுத்து வன்மையையும் குறிக்கும் ஓர் குறியீடு.


சமீபத்தில் 'ஏமாற்றாதீர்! ஏமாறாதீர்! என்ற தலைப்பில் அய்ந்து பத்தி கட்டுரை  - பஞ்சதந்திர கதைகளில் ஆரம்பித்து, எது செல்வம், எது உண்மையான உடல்நலம், தந்தை பெரியாரின் ஒப்பற்ற பொது நலம், சிக்கனம், சேமிப்பு, திருவள்ளுவர் என்று பல கருத்துக்களை அழகாக வாசகர்களுக்கு விளக்கி ஓர் அருமையான நீதியுள்ள கதைக்குள் கதையோடு நிறைவு பெற்றது. மற்றுமொரு கட்டுரை 'ஆய்வுத் திரட்டு' என்று நான்கு பகுதிகளாக நமது சமூகத்தின் நிலைகள், பாரம்பரியம், உழைக்கும் வர்க்கத்தின் இடர்ப்பாடுகள் என்று பேராசிரியர் தொ. பரமசிவன் மற்றும் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களது நூல்களி லிருந்து எடுத்துக்காட்டுகளுடன் ஆழமான எழுத்து. இக்கட்டுரைகளிலிருந்து சுவாரசியமான பல நல்ல கருத்துக்களைத் தெரிந்து கொண்டேன். எடுத்துக்காட்டாக 'கிராமம்' என்ற சொல் உருவான சுவையான பின்னணி. பல சிறந்த ஆராய்ச்சி நூல்களை நான் 'வாழ்வியல் சிந்தனைகள்' மூலம் அறிந்து படிக்கப் பெற்றது என் ஆசிர்வாதம்.


ஆசிரியர் அய்யாவின் நூல்களின் மீதான எல்லையற்ற ஈடுபாட்டை நன்றாக உணர முடிகிறது. முனைவர் அரசு செல்லையாவின் கேள்விகளும், அவற்றுக்கான பதில்களுமே இதற்கு சான்று. எத்தனையோ புத்தகங்களை நான் அய்யாவின் 'வாழ்வியல் சிந்தனைகள்' மூலமாக தெரிந்து கொண்டு வாங்கி படித்து மகிழ்ந்தேன். பிறரோடு பகிர்ந்து கொண்டேன். அவற்றுள் சில ராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை', முனைவர் கண்ணபிரான் ரவிசங்கரின்  'அறியப்படாத தமிழ்மொழி, ஜேம்ஸ் ஹென்றி பெர்னார்டின் டி. செயன்ட் பியரின் 'இந்தியக் குடிசை',


 வாழ்வை எதிர்கொள்ளும் மனத்தெம்பையும், உளவியல் நுணுக்கங்களையும் கூறும் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் - சிந்தனைக் களஞ்சியம். உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் முதற்கொண்டு பாமர மக்கள் வரை அவரவர் வாழ்க்கையைச் செம்மையாக வெற்றி நோக்கி  அழைத்துச் செல்லும் வழிகாட்டியாக அமைந்தவை. மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அந்த மகிழ்ச்சிக்கு அடிப்படையான உடல் நலம், அடிப்படை முயற்சி, ஒழுக்கம், தன்னலமின்மை இவற்றை தான் படித்த மற்றும் தன் அனுபவம் வாயிலாக ஆசிரியர் கூறும் கருத்துகள் என்றென்றும் மறவாமல் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை.


தான்பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவும், மக்கள் அறிவாளிகளாக திகழ வேண்டும் என்ற பெரு நோக்குடனும் அய்யா எழுதியுள்ளார். தமிழர்கள் ஒவ்வொருவரும் இவற்றைப் படித்து பயன் பெற வேண்டும். இனம், மொழி இவைகளுக்கு அப்பாற்பட்ட கட்டுரைகள்.


பல  அலுவல்களுக்கு இடையே நேரம் ஒதுக்கி இந்த அறிவு மலர்மாலையை அளித்த அய்யா அவர்களுக்கு நன்றிகள் பல.


- முனைவர் வை. சங்கீதா


Comments