ஆசிரியர் விடையளிக்கிறார்


கேள்வி: 2021இல் அமையப் போவது ஆன்மிக ஆட்சிதான், என பாஜக தலைவர் முருகன் கூறுவது எதனை காட்டுகிறது?


- வெங்கட. இராசா, ம.பொடையூர்


பதில்: பா.ஜ.க. தலைவர் நண்பர் முருகன் அவர்கள் ஒரு நல்ல தமாஷ் பேர்வழி என்பதைக் காட்டுகிறது!


கேள்வி: மனுஸ்மிருதியின் இழிவுகளை, கொடுமை யான சட்டங்களை கடுமையாக எதிர்த்து எரித்த அம்பேத்கரை தன்வயப்படுத்தி போற்ற முயற்சிக்கும் பா.ஜ.க வின் கபட வேடத்தை மக்கள் உணர இது சரியான தருணம் தானே?


- அ.சி கிருபாகரராஜ், பெருங்களத்தூர்.   


பதில்: அம்பேத்கரை அணைத்து அழிப்பது என்ப தால் அம்பேத்கார் படம் ஒரு பக்கம் - முகமூடியாக!


உண்மையில் மனுதர்மத்திற்கு வக்காலத்து. பா.ஜ.க. வழக்குரைஞர்கள் கூட்டத்தில் மதுரையில் தற் போதைய சட்டத்திற்கு பதில் மனுவை அரசியல் சட்டமாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானம் இயற்றியுள்ளனர் (ஆதாரம்: பிரண்ட்லைன்).


1949இல் அரசியல் சட்டம் வழங்கப்பட்ட நிலையில், மனுதர்மத்தை அல்லவா கடைப்பிடித்திருக்க வேண் டும் என்ற கோல்வால்கர் போன்றோர் எழுதிய கட்டுரை  'ஆர்கனைசர்' வார ஏட்டில் வெளியாகியது. இவற்றை ஏனோ இப்போது அவர்கள் இங்கே வெளிப்படுத்துவது இல்லை. மனுதர்மத்தை ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் ஏற்கிறார்களா, மறுக்கிறார்களா என தெளிவுபடுத் தட்டுமே!


கேள்வி: பீகார் சட்டசபைத் தேர்தல் உணர்த்துவது என்ன?


- சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.


பதில்: விடுதலை (12.11.2020) விரிவான அறிக்கை யினைக் காண்க!


இனி வரப்போகும் தேர்தல்களில் பா.ஜ.க.வை எதிர்க்கும் கூட்டணி கட்சிகளுக்கு ஓர் எச்சரிக்கை மணி. எந்த வியூகத்திலும் அலட்சியம் கூடாது.


ஒற்றுமை தேவை - தங்கள் கட்சியைவிட அரசியல் எதிரியை வீழ்த்துவது முக்கியம் முக்கியம் என்று உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொண்டால் பல வெற்றிக் கனிகளை பறிக்கலாம்!


கேள்வி: நடிகர்கள், தமிழ் நாட்டில் மட்டும் அரசியல் குழப்பம் விளைவிப்பதற்கு என்ன காரணம்?


- நெய்வேலி க.தியாகராசன்,


கொரநாட்டுக் கருப்பூர்.


பதில்: பொழுதுபோக்கான  கலையின் போதை, அளவு கடந்து அரசியல் கூத்து வரை - மக்களுக்கு (ஊடகங்களால்) ஏற்படுத்தப்பட்டதன் தீய விளைவு இது!


தேர்தலில் போட்டியிட மக்களுக்கு உழைக்க - கொள்கை, தியாகம், புத்தி கூர்மை எதுவும் தேவை யில்லை - சினிமா நடிப்பே போதும் என்பது எவ்வளவு கீழிறக்கம்! ஏ, தாழ்ந்த தமிழகமே!


கேள்வி: மக்கள் பிரச்சினைகள் பல இருக்க, தமிழக பா.ஜ.கட்சிக்கு தற்போது வேல் யாத்திரை நடத்துவதற்கு என்ன அவசியம் வந்தது?


- வேலாயுதம், வில்லிவாக்கம்.


பதில்: பதவியோ, சட்டமன்ற, நாடாளுமன்ற இடங் களோ கிடைக்காதபோது, வேலாவது கிடைத்ததே! அந்த பக்தி போதை மாத்திரையாவது செலாவணி ஆகிறதா என்று பார்க்கும் தாயத்து விற்கும் மந்திரவாதி நிலை போல் ஆகிவிட்டது பரிதாபத்திற்குரியது!


கேள்வி: நிற வெறியை ஒழிக்க வேண்டும் என்று ஆபிரகாம் லிங்கனும், நிறவெறிக்கு  ஆதரவாக டக்ளசும் வாதப் போரில் ஈடுபட்டிருந்த நேரம். சமகால சிந்தனையாளரும் பகுத்தறிவாளருமான ராபர்ட் கிரீன் இங்கர்சாலின் நிலைப்பாடு?


- அழகு பாண்டி. இரா, மதுரை-14


பதில்: மனித உரிமை - சம உரிமை - பகுத்தறிவு  - அவரது  அறவழி - ஆபிரகாம் லிங்கனின்  முற்போக்கு வழியில் தான் இருக்கும் - களத்திற்கு வராவிட்டாலும் கூட!


ஆபிரகாம் லிங்கன் பற்றிய இங்கர்சாலின் உரை புத்தகமாக வெளிவந்துள்ளது (அதில் லிங்கன், டக்ளஸ் சின் கருத்துகளையும் பதிவு செய்துள்ளார்). அந்நூலின் முகப்புப் பக்கத்தில் வரும் ”Nothing is grander than to break chains from the bodies of men..." என்ற வரி இங்கர்சாலின் கருத்தைச் சொல்லும்.


கேள்வி: இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குச் சென்று பழக்கவழக்கங்களால், மதத்தால் கூட மாறுபட்டாலும், ஜாதிப் பெயரொட்டு இருப்பதைத் தன் அடையாளமாக எண்ணி பெருமிதப்படுகிறார்களே... இதை எப்படிப் புரிந்துகொள்வது?


- முகிலா, குரோம்பேட்டை


பதில்: ஜாதி - தீண்டாமை கொடுமை -  இழிவு பற்றி அவர்களுக்கு போதிய விளக்கம் தரப்படாததால் அது ஏதோ ஒரு பெயரின் ஒட்டு என்ற அளவில் மட்டும் நினைத்துக் கொண்டுள்ளனர். விளக்கினால் மாறி விடுவார்கள் என்பது நிச்சயம்!


கேள்வி: நான்கு சுவர்களுக்குள், சாட்சிகள் இல்லாத சூழலில், எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஒருவரை அவமானப்படுத்தினால் அது வன்கொடுமை ஆகாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு என்ன சொல்ல வருகிறது?


- திராவிட விஷ்ணு, வீராக்கன்


பதில்: மிகப் பெரிய கேடான தீர்ப்பு - அரசியல் சட்டத்தின் 17ஆவது பிரிவையே தவறாக வியாக்யானம் செய்யும் தவறான தீர்ப்பு.  17ஆவது பிரிவு (Article 17) கூறுவது 
 untouchability is abolished and its practices in any form is forbidden by law எந்த ரூபத்திலும் என்பதை சூத்திரர் போக விடலாமா?


இதற்கு முன் சில தீர்ப்புகளில், இந்த தீண்டாமைக் குற்றத்துக்கான தண்டனையிலிருந்து தப்புவிக்கும் வகையில், பொது இடங்கள் (Public Places) என்றும், பொதுமக்கள் பார்வையில் உள்ள இடங்கள்  (Places in Public View) என்றும்  பிரித்து சட்ட வியாக்யானம் செய்து நோக்கத்தையே நிறைவேறவிடாமல் செய்யும் நிலை பரவலாக உள்ளது.


எனவே நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சட்டத்தின் ஓட்டைகளை அடைப்பதோடு, குற்றவாளி கள் இந்த தீண்டாமைக் கொடுமை புரிந்துவிட்டு சட்டப் பிடியிலிருந்து தப்ப முடியாத நிலையை உருவாக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டத்தைத் திருத்தி, தவறான தீர்ப்புகள் வராத வகையில் தடுப்பணை கட்ட முன் வர வேண்டும்.


சிறப்புக் கேள்வி:கவிஞர் வேழவேந்தன்


மேனாள் அமைச்சர்


கேள்வி: தந்தை பெரியார் அறக்கட்டளையின் மூலம் கல்லூரிகள், பல்கலைக் கழகம், குழந்தைகள் இல்லம், தொழிற்பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றை  நிறுவி, தாங்களும் பொறுப்பேற்று நிருவகித்து வருகிறீர்கள். இவற்றில் எந்த நிறுவனம் பெரிதும் செழித்தோங்கி உயர்ந்திட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?


பதில்: நன்றி !  கழகக் கவி மாமன்னர் வேழவேந்தன் அவர்களே,


நம் பிள்ளைகளில் எந்த பிள்ளையைத் தனித்துப் பிரித்துப் பார்க்க முடியும்.


வளர்ச்சி குன்றியுள்ளவர்களுக்கு தனி ஊட்டச் சத்து தருவதுபோல, எல்லோருக்கும் எல்லாமும் தருவது போல, அனைத்து நிறுவனங்களும் நன்கு வளர வேண் டும். குறிப்பாக நாகம்மையார் குழந்தைகள் இல்லப் ("அனாதை"  - "Orphan" என்ற சொல் நீக்கப்பட்ட இல்லம்) பிள்ளைகள் வருங்காலத்தில் சிறப்பாக வளர வேண்டும். இப்போது அவர்களில் சிலர் தனிச் சிறப்பினை அடைந்திருப்பது போல அனைவரும் அடைய வேண்டும் என்பதே நம் ஆசை - பெரு விருப்பம்.


கேள்வி: இருட்டில் திருட்டுத்தனமாக வஞ்சக நரிகள் கூடி நம் ஈரோட்டுப் பகலவன் சிலைகளை அசிங்கப்படுத்தும் நிகழ்வுகள் கொதிப்பூட்டுகின்ற னவே, இந்த நிலையை அடியோடு நிறுத்த வழிவகைகள் என்னவென்று தாங்கள் கருதுகிறீர்கள்?


பதில்: தி.மு.க. ஆட்சிக்கு வரும் நாளை எதிர் நோக்குவோம் - ஆட்சி மாற்றம்தான் ஒரே விடை -  தடுப்பு மருந்து. "கொண்டவர் சரியாக இருந்தால் கண்டவர் எல்லாம் வாலாட்ட மாட்டார்!" என்பது கிராமியப் பழமொழி அல்லவா?


Comments