ஜோபைடன் வெற்றி பெறக்கூடும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

உலகம் முழுவதும் எதிர்பார்க்கும் அமெரிக்காவில் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல்: இன்றைய அதிபர் டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகள் - செயல்முறைகள்மீது அமெரிக்க மக்கள் அதிருப்தி!உலகம் முழுவதும் எதிர்பார்க்கும் அமெரிக்காவில் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல். இன்றைய அதிபர் டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகள் - செயல்முறைகள்மீது அமெரிக்க மக்கள் அதிருப்தி! அமெரிக்க ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோபைடன் வெற்றி பெறக் கூடும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.


அவரது அறிக்கை வருமாறு:


அமெரிக்காவின் அதிபர் தேர்தல் இன்று (3.11.2020) அங்கே நடைபெறுவதன் அறிகுறியாக வாக்களிக்கும் நாள் - தேர்தல் சாவடிகளில் என்றாலும், கரோனா காலத்தில் அஞ்சல் வழியாகவும், நேரடியாகவே சென்றும் முன்கூட்டியே தங்களது வாக்கு களைப் பதிவு செய்யும் ஏற்பாடு அங்கே சிறப்பாக நடைபெற்றுள்ளது.


50 மாகாணங்கள் உள்ள அமெரிக்க அய்க்கிய நாட்டில், இந்தத் தேர்தலின் முடிவை உலகமே எதிர்நோக்கிக் கொண் டுள்ள தேர்தல் முடிவாக அது அமைந் துள்ளது! 33 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு அது!!


ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோபைடன்


வழக்கமான இரு கட்சியினரிடையே தான் உண்மையான கடும் போட்டி, அதிபர் டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக உள்ள (இரண்டாவது முறை) ஆளும் கட்சியான ரிபப்ளிக்  கட்சி என்ற குடியரசுக் கட்சிக்கும், ஜோபைடன் (முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர்)  எதிர்த்துப் போட்டியிடும் டெமோக்கிராடிக் கட்சி - ஜனநாயகக் கட்சிக்கும் இடையேதான் அந்தப் போட்டி!நான்கு ஆண்டுகாலப் பதவி காலத்தை முடித்துள்ள டொனால்ட் டிரம்ப், மீண்டும் எப்படியாவது இரண்டாவது முறை அதிபர் பதவியைப் பிடித்துவிட கடுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்!


டொனால்ட் டிரம்ப்மீது மக்கள் அதிருப்தி


அவரை மீண்டும் அப்பதவிக்கு வர விடக் கூடாது என்று அவருக்கு எதிரான கருப்பின மக்களும், அமெரிக்க வெள்ளையர் பெரும்பாலானோரும் அவரது பல்வேறு நிர்வாக அதிகார மேலாண்மை செயலில் அதிருப்தி அடைந்ததின் காரணமாக கச்சை கட்டி நிற்கின்றனர்!


இதுவரை (அதாவது கடந்த சனிக்கிழமை, 31.10.2020) சுமார் 9 கோடியே 20 லட்சம் வாக்காளர்கள் அஞ்சல்மூலமும், நேரிலும் தங்கள் வாக்குகளை ஏற்கெனவே பதிவு செய்துவிட்டார்கள். அதாவது சுமார் 43 சதவிகிதம் பேர் வாக்குப் பதிவு செய்துள்ளனர் என்பதே இத்தேர்தல் எத்தகைய எதிர்பார்ப்பு மிகுந்த பரபரப்பான தேர்தல் என்பதை உலகுக்குப் பறைசாற்றக் கூடும்! அன்றுவரை பதிவு செய்த 43 சதவிகித வாக்காளர்களில் 5 கோடி வாக்காளர்கள் அஞ்சல் வழியைப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது - இந்த கரோனா தொற்றுள்ள காலத்தில்!


இன்று (நவம்பர் 3) நடைபெறும் தேர்த லில் - அந்த தேர்தல் முறை சற்று வித்தி யாசமானது என்பதை மனதிற்கொள்ள வேண்டும் - உடனடியாக வாக்கு எண் ணிக்கை நடைபெறும் முறையும், முடிவை அப்போதே அறிவிப்பதற்குப் பதிலாக,


வரும் 2021, ஜனவரி மாதம் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் - வாக்குகள் எண்ணும் முடிவை அறிவிப்பார்கள்.


ஜனவரி 20 ஆம் தேதி புதிய அதிபர் பதவியேற்பு


2021 ஜனவரி 20 ஆம் தேதி புதிய அதிபர் பதவியேற்று வெள்ளை மாளிகைக்குள் நுழையும் வாய்ப்பைப் பெறுவார்!அங்கே குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முறை ‘எலக்டிரால் காலேஜ்' (Electoral College) என்ற அதிபருக்கு வாக்களித்து, அவரைத் தேர்வு செய்யும் தேர்வாளர்கள், 3 ஆம் தேதி மக்களால் தேர்வு (கட்சி ரீதியாக, மாகாணங்களில் தேர்வு செய்யப்படுகிறார்கள்).


கீழ்சபை (House of Representatives) மக்கள் பிரதிநிதித்துவ சபையில்  உள்ள 435 இடங்களுக்கும், மேல்சபை என்று அழைக்கப்படும் செனட் சபைக்கும் உள்ள 100 இடங்களுக்கும், ஆக மொத்தம் 535 இடங்களுக்கும் வாக்குப் பதிவு நடை பெறுகின்றது.


இது தவிர 11 மாகாணங்களில் கவர்னர் பதவிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.


அமெரிக்காவில் உள்ள 50 மாகா ணங்களில் இருக்கின்ற மக்கள் பிரதிநிதி கள் சபை மற்றும் செனட் சபை உறுப்பி னர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்த மாகாணத்துக்கான தேர்தல் சபை உறுப் பினர்கள் எண்ணிக்கை அமையும்.


அதிக மக்கள் தொகையைக் கொண்ட கலிஃபோர்னியா மாகாணத்தின் தேர்தல் சபை உறுப்பினர்கள் 55 ஆகும். அலாஸ்கா, வடக்கு டெக்கோட்டா, மான்டனா உள் ளிட்ட 8 மாகாணங்களின் தேர்தல் சபை உறுப்பினர்கள் எண்ணிக்கை தலா 3 ஆகும்!


தேர்தல் நாளான இன்று (நவம்பர் 3) வாக்காளர்கள் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பது என்பது, உண்மையில் தேர்ந்தெடுப்பது அவரவர்கள் மாகாணத்துக்கான ‘எலக்டிரால் காலேஜ்' - தேர்ந்தெடுப்பவர்கள் அமைப்பின் உறுப்பினர்களைத்தான்! இவ்வாறு அமெரிக்கா முழுவதும் 535 தேர்தல் சபை உறுப்பினர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.


தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மாகாண வாரியாக எண்ணப்படும்.


ஒரு மாத காலத்தில் எந்தக் கட்சிக்கு அதிகமான வாக்குகள் (பாப்புலர் வாக் குகள்) கிடைக்கின்றனவோ, அந்த மாகா ணத்தில் உள்ள அத்தனை இடங்களும் அந்தக் கட்சிக்கே வழங்கப்படும். தேர்ந் தெடுக்கப்படும் தேர்தல் சபை உறுப்பினர்கள் மொத்த எண்ணிக்கை 535 என்பதால், இதில் பாதிக்கு மேற்பட்ட - அதாவது 270 வாக்குகள் அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறுபவர் குடியரசுத் தலைவராக - தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவிக்கப்படுகிறது!


தற்போதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப்மீதும், அவரது ஆட்சியின்மீதும் அம்மக்களுக்கு பரவலான அதிருப்தி நிலவுவது மறுக்க முடியாத உண்மை. அதே நேரத்தில் பல அதிரடிகளில் ஈடுபடுவதும், ‘வித்தைகளில்' திளைப்பதும் அவருக்குக் கைவந்த கலை என்பது அம்மக்கள்  பலரிடம் பரவலாக உள்ள கருத்து.


ஜோபைடன், அவருடன் ஒப்பிடுகையில், அமைதியும், ஆழமாக உள்ளவர் என்பதும் பரவலான கருத்து.


கரோனா காலத்தை டிரம்ப் கையாண் டதுபற்றி அவர்மீது குற்றச்சாற்றும், விவா தத்தின்போது, டிரம்ப், ஜோபைடனை கிரிமினல் என்று குற்றம் சுமத்தியதும் - பரஸ்பர விவாதத்தின் தன்மையை முற்றி லும் ஒரு ‘அவலச்சுவை' (Bad Taste) ஆக்கி யதாகும் என்பது பொது நோக்கர்கள்


கருத்து!


கருப்பின மக்கள் டிரம்ப்பிற்கு எதிரான நிலைப்பாடு!


சென்ற தேர்தலில் அதிக ஆர்வம் காட்டிய கருப்பின மக்கள், இம்முறை அவர்களுக்கு எதிராகத் தனது வல்லாண்மையை முடுக்கும் டிரம்ப்பிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத் துள்ளனர் என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்று!


அமெரிக்காவில், இந்திய வம்சாவளியினர் 40 லட்சம் பேர் உள்ளதால், அவர்களது ஆதரவு ஒரு பெரும் அளவுக்கு முடிவைத் தீர்மானிக்கும் - பெரும் பங்காற்றும் ஒன் றாகும்!


முற்போக்கான மனித உரிமைப் போராளி திருமதி கமலாஹாரிஸ்


திருமதி கமலாஹாரிஸ் அவர்களின் பூர்வீகம், அவரது தந்தை சென்னை - தமிழ்நாடு - அவர் ஜமைக்காவைச் சேர்ந்தவரை காதலித்துத் திருமணம் செய்துகொண்ட முற்போக்கு கருத்துள்ளவர். சிறந்த வழக்குரைஞர் - சட்ட வல்லுநர் - அமெரிக்க செனட் சபை உறுப்பினர். அவரை ஜனநாயகக் கட்சி, துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராகத் தேர்வு செய்ததினால், போட்டியிடுகிறார்.


ரிபப்ளிக் கட்சியின் சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு, மைக்பென்ஸ் என்ற அமெரிக்கர் (வெள்ளையர்) போட்டி யிடுகிறார்.


இதனால், இந்திய வம்சாவளியினர் ஆதரவு கமலா ஹாரிசுக்குப் பெருகியுள்ளது. அதிலும் திருமதி.கமலா ஹாரிஸ் கருப்பின மக்களின் உரிமைப் போராட்டங்களை பல காலமாக ஆதரித்து வரும் முற்போக்கான மனித உரிமைப் போராளி.


இவையெல்லாம் இந்தத் தேர்தலின் - முடிவில் பிரதிபலிக்கக் கூடும்!


டிரம்ப்பை தோல்வி பயம் உலுக்குகிறது


என்றாலும், இந்தத் தேர்தலில் போட்டி யிடும் தற்போதைய அதிபர், ‘நான் தோற்றுவிட்டால், அமெரிக்காவை விட்டு வெளியேறி விடுவேன்' என்று கூறியது, அவர்மீது பரிதாபத்தை ஏற்படுத்துவதைவிட தோல்வி பயம் அவரை உலுக்குகிறது என்பதையே காட்டும். ஜனநாயகத்தில், தேர்தல் வெற்றியைப் போலவே, தோல் வியைச் சமமாகப் பார்க்கும் பக்குவமும், முதிர்ச்சியும் இல்லாதவராக உள்ளாரே என்பதே அங்குள்ள பலரால் பேசப்படும் கருத்துமாகும்.


இங்கிலாந்து அமெரிக்க ஏடுகள் ஜோபைடனுக்கு ஆதரவு!


இதுபற்றி இன்று காலையில் (நவம்பர் 3) வெளிவந்துள்ள ‘இந்து' ஆங்கில நாளேட்டில், கரிமெல்லா சுப்பிரமணியம் என்பவர் எழுதிய செய்திக் கட்டுரையில், ‘Science Vs Trump' ‘அறிவியலுக்கும் எதிரான டிரம்ப்' என்ற தலைப்பிட்டு இத்தகவல்களைத் தந்துள்ளார்!


தற்போது குடியரசுத் தலைவராக உள்ள டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் மீண்டும் தொடரும் வகையில் பதவிக்கு வருவது அந்நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு, மக்களின் நல்வாழ்வுக்கு, கரோனா (கோவிட் 19) போன்ற தொற்று நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கப் பெரிதும் உதவாது என்ற கருத்தை, லண்டனிலிருந்து வெளி வரும் அறிவியல் ஆய்வு ஏடான ‘‘நேச்சர்'' (‘Nature'), ‘‘தி சைன்டிபிஃக் அமெரிக்கன்'' ‘(The Scientific American') போன்ற ஏடுகள் தங்களது தலையங்கத்தில் எழுதியுள்ளதோடு, ஜோபைடனுக்கு வெளிப்படையான ஆதர வையும் தந்துள்ளது மிகவும் குறிப்பிடத் தக்கதாகும்.


‘நேச்சர்' தனது தலையங்கத்தில், ‘‘as is repudiates the President Trump, anti - Science anti - immigrant, and blatantly xenophobic Policies'' டொனால்ட் டிரம்பின் அறிவியல் விரோத, குடியேறுவோர் விரோத, இனவெறி உணர்வு நடைமுறையை எதிர்த்து எழுதியுள்ளது!


மூன்றாவதாக ‘தி நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆஃப் மெடிசன்' (NEJM) என்ற ஏடு இவ்வளவு வெளிப்படையாக எழுதாவிட்டாலும், சுமார் 2,50,000 மரணங்கள் கரோனாவால் அமெரிக்காவில் ஏற்பட்டதற்கு, நிர்வாகத்தின் தவறுகளும், போதாமைகளும், அறிவியல் அறிஞர்களின் கருத்துகளை மதிக்காமல் நடந்துகொண்டதுதான் காரணம் என்றும் எழுதியுள்ளது.


இந்த நிலைகள், டிரம்பிற்குத் தோல்வி ஏற்படுவதற்கும், ஜோபைடன் வெற்றிக்கும் உதவக் கூடிய தேர்தல் அம்சங்களாகும்.


அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவால் உலக அளவில்


மாற்றம் ஏற்படும்?


‘‘பென்சில்வேனியா மாகாணமும், புளோரிடா மாகாணமும் அதிக ஆதரவை ஜோபைடனுக்குத் தந்தால், அவரது வெற்றி உறுதியாகிவிடும்'' என்கிறார் ஒரு அமெரிக்க வாக்காளர் பிரமுகர். பொறுத்துப் பார்ப்போம்.


இதன் முடிவு உலக அளவில் மாற்றங்களை வரவழைக்கும்?


 


 


கி.வீரமணி,


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


3.11.2020


Comments