'தினமணி'க்கு ஒரு பதிலடி!'

அறிவிலிகள் யார் - விதண்டாவாதக்காரர் யார்?


* மின்சாரம்


(1) 1500 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்வியல் நெறி.


(2) எப்பேர்ப்பட்ட ஆண்களும், அறிவு ஜீவி களும் - சாந்தகுணம் கொண்ட இயல்புள்ளவர்களும் பெண்களின் தோற்ற அழகில் சிக்கிக் கொள்ள நேரிடும். அதனால்தான் பெண்களை சந்தேகக் கண் கொண்டு ஆண்களுக்கு மனு அறிவுறுத்தியிருக்கிறார்.


3) மனுதர்மத்தை அன்றைய சமூகநிலையை வைத்துத்தான் பார்க்க வேண்டுமே தவிர இன்றைய சமுதாய கட்டமைப்பின் அடிப்படையில் விமர்சிக்க முற்படுவது அறிவின்மை அல்லது விதாண்டவாதம்.  பெண்கள் ஆண்களின் நுகர்வுக்காகவே படைக்கப் பட்டவள் என்ற உறுதியான கருத்து அப்போதைய மக்களின் நடைமுறை.


4) இயற்கைச் சீற்றத்தை தடுக்கும் நோக்கிலும், சமூக வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கொண்டு எப்படி சிறப்பாக வாழ்வது என்பதுபற்றியும் பல முனிவர்கள் ஒன்று கூடி சுவாயம்பு (மனு)வை அணுகி ஆலோசனை கேட்டதற்கு மாமுனி மனு வகுத்துக் கொடுத்ததுதான் மனுஸ்மிருதி என்னும் வாழ் வியல் நூல்.


5) நடைமுறையில் இல்லாத கருத்துகளைப் பற்றிய வாத பிரதி வாதங்கள் தேவை யற்றவை.


இந்த 21 ஆம் நூற்றாண் டிலும் மனுதர்மத்துக்கு ஏதோ ஒரு வகையில் வக்காலத்து வாங்குகிறார்கள் என்று சொன் னால் வாயில் வந்த மாதிரி திட்டத்தான் தோன்றும். ஆனா லும் நாம் அதைச் செய்யப் போவதில்லை அதுவும் மனு தர்மம் - வாழ்வியல் நூலாம் - இவ்வாறு எழுதிவிட்டு இதை ஏன் விமர் சிக்கிறார்கள் என்ற கேள்வி வேறு.


சரி..


'மனுதர்மமும் ஹிந்து மதமும்' என்ற தலைப்பில் கட்டுரை எதில் வெளி வந் துள்ளது? 'இனமணி'யான 'தினமணி'யில் (31.10.2020) வராமல் வேறு எதில் தான் வர முடியும்? இது ஒரு நடுப்பக்கச் சிறப்புக் கட்டுரையாம்!


மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதிதான் என்று சொல்ல மனம் வரவில்லை. பெண் விபசார தோஷம் உள்ளவர்கள் (மனு அத்தியாயம் 9 - சுலோகம் 19) என்று சொன்னதை ஜீரணிக்க முடியவில்லை என்று சொல்ல மனம் வரவில்லை. ஆனாலும் வரிந்து கட்டிக் கொண்டு எழுத முன் வருகிறார்கள்.


ஒருவன் மனைவியாளி டத்தில் மனையாளில்லாத மற் றொருவன் பிள்ளையையும் உண்டு பண்ணலாம். (மனு அத்தியாயம் 9 - சுலோகம் 52) என்று கூறுவது - 'தினமணி' கூட்டத்தின் மன சாட்சிப்படி வாழ்வியல் தானா?


படுக்கை, ஆசனம்; அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (மனு அத்தியாயம் 9 - சுலோகம் 17).


அக்கிரகாரவாசிகளின் கண்ணோட்டத்தில் இதுதான் வாழ்வியல்  நெறி - அப்படித்தானே! சொந்த தாயையும், சகோதரியையும், மகளையும் இப்படித் தான் பார்க் கிறார்களா? அந்தப் பிர்மா ஆனவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய,  சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங்களைத் தனித் தனி யாகப் பகுத்தார். (மனு அத்தியாயம் 1 - சுலோகம் 87).


பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும், பிர்மாவின் உயர்ந்த இடத்தில் பிறந்ததாலும் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாரின் பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபு வாகிறான்.


ஒரு கடவுள் செய்கிற வேலையா இது? கடவுளையே காழ்ப்புணர்ச்சி கொண்டவன், பொதுத் தன்மை கொண்டவன் அல்ல - கடவுளுக்கே பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் கீழ்த்தர கெட்டப் புத்தி உண்டு என்று 'தினமணி 'ஒப்புக் கொண்டு விட்டதே! 'தினமணி' கட்டுரையின் தலைப்பில் உள்ள ஹிந்து மதத்தின் யோக்கியதை இதுதான் என்று இதன் மூலம் தெளிவாகவில்லையா?


பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கப் பட்டதோடு நின்று விட்டால் போதுமா? அவர்களின் பேத உணர்ச்சி, வெறுப்புணர்ச்சி எந்த நீள, அகல, உயர, ஆழத்திற்குள் செல்லுகிறது தெரியுமா?


சூத்திரன் ஏழுவகைப்படுவான்  என்பதில் ஒன்று விபசாரி மகன் (மனு அத்தியாயம் 8 - சுலோகம்  415).


'தினமணி'யின் பூணூல்களுக்கு எந்த அளவுக்குக் கொழுப்பேறி மண்டைக்கு மேல் குடுமி குதிக்கிறது!


இந்நாட்டின் பெரும்பாலான பார்ப்பனர் அல்லாத மக்களை விபசாரி மகன் என்று கூறும் ஒரு நூல் "வாழ்வியல் நெறியாம்!" - அதை எழுதியவர் மாமுனி யாம். 'தினமணி'யின் புகழாரத்தைச் சூட்டிக் கொள்ள வேண்டும் என்றால் இத்தகு கீழ்த் தரப்புத்தி அவர் களுக்கு இருக்க வேண்டும்? கொலை தண்டனையில் பிராமணன் கொலை செய்தால் சிகைச் சேதம் (மயிர் நீக்கம்) சூத்திரன் கொலை செய்தால் சிரச் சேதம்! (தலையைக் கொய்தல்) ஆக சூத்திரன் உயிர் பார்ப் பானின் தலை மயிருக்குச் சமம் - அப்படிதானே!


இதில் என்ன அயோக்கியத்தனம் தெரியுமா?  அந்தக் காலத்தில் இருந்த சமூக அமைப்புக்கேற்ப மனு எழுதப்பட்டதாம். அந்தக் காலமாகவே இருக்கட்டும். இந்த அநீதி எப்படி நீதியாகும்? அந்தக் காலம் என்கிறதே - அந்தக் காலத்தில் தமிழர்கள் இப்படித் தான் வாழ்ந்தார்களா? என்ற கேள்விக்கு பதில் தேவை. பல முனிவர்கள் ஒன்று கூடி சுவாயம்பு (மனு)வை அணுகி ஆலோசனை கேட்டதற்கு மனு வகுத்துக் கொடுத்தது தான் மனுநீதி என்கிறது மனு நீதியின் மறுபதிப்பான 'தினமணி'


ஆனால் மனுதர்ம சாத்திர நூல் என்ன கூறுகிறது. "அந்த பிர்மாவானவர் இந்த சாஸ்திரத்தை உண்டு பண்ணி விதிப்படி எனக்கு அதாவது மனுவை முனி வருக்கு முன்னர் ஓதுவித்தார். யானும் மரீச்சி முதலான ரிஷிகளுக்கு ஓதுவித்தேன் (மனுதர்மம் அத்தியாயம் ஒன்று, சுலோகம் 58)


மனுதர்ம நூல் கூறுவது உண்மையா? 'தினமணி' கட்டுரையாளர் கூறுவது உண்மையா? இதைக்கூட சரியாகத் தெரிந்து கொள்ளாமல் எழுதுகிறார்களே!


இந்த லட்சணத்தில் 'தினமணி கூறுகிறது - கட்டுரை எழுதியவர் வரலாற்று ஆய்வாளராம்! இவர்களின் ஆய்வை எந்த குப்பைத் தொட்டியில் கொட்ட? 'எப்போதோ எழுதியது - இப்போது அதற்கு என்ன வந்தது?' என்று கூறி விமர்சனங்களைத் தாங்க இயலாமல் ஏற்பட்ட மண்டை வலியால் தப்பிக்கும் யுக்திதானே இது?


எப்பொழுதோ எழுதப்பட்ட புண்ணாக்கு மனுவை கொளுத்த வேண்டியதுதானே - அண்ணல் அம்பேத் கரும், தந்தை பெரியாரும் அதைத்தானே செய்தனர்?


எப்போதோ அல்ல; வெள்ளைக்காரன் ஆட்சிக் காலம் வரை 'ஹிந்துலா' என்பதற்கு மூல ஆதாரம் இந்த மனுஸ்மிருதிதானே!


இன்றைய நடப்புக்கு மனுதர்ம சாஸ்திரம் எவ்வளவு ஒவ்வாதது. ஆனாலும், நாகரிகத்திற்கே முரண்பட்டது என்றாலும் (However Absolute and Out of date may be) அது இறுதியானது - நீதி தீர்ப்புகளை கட்டுப்படுத்தக் கூடியதுமாகும். - பிரிவு கவுன்சில் தீர்ப்பு


உண்மைகள் இவ்வாறு இருக்க - விமர்சன தீப்பொறியின் சூடு தாங்க முடியாத தர்ப்பைப் புல்லினர் எந்தக் காலத்திலோ அந்தக் காலச் சூழலில் எழுதப்பட்ட நூல் மனுதர்மம் என்று கூறுவதோடு நின்றாலும் பரவாயில்லை - போய்த் தொலையட்டும் என்று  விட்டு (?) தொலைக்கலாம். ஆரிய வஞ்சக நஞ்சைக் கக்கும் மனுதர்மம் என்னும் கொடும் விரியனை  விமர்சிப்பது அறிவின்மை அல்லது விதாண்டாவாதமா?  - திமிரோடு சொல்லுகிறது 'தினமணி'.  இன்றைக்கும் பார்ப்பனர்கள் அந்த மனுதர்ம நஞ்சாகத்தான் படம் எடுத்து ஆடுகிறார்கள் என்பதற்கு இது ஒன்று போதாதா?


படம் எடுத்துக் கொத்தும் பாம்புக்குப் பெயர் ....அறிவுடைமையா, அதுவே சரியானதுவாம்!


கொத்தவரும் பாம்பை அடித்துக் கொல்லத் தடி எடுத்தால் அது அறிவின்மையாம் - விதண்டாவாதமாம்!


எவ்வளவு ஆணவம் இருந்தால் இந்த 2020லும் ஒரு குலத்துக்கொரு நீதி பேசும் -  பெண்களை விபச் சாரத் தோஷம்  உள்ளோர் என்று எழுதும் மனுதர்மத்தை விமர்சிப்பவர்களை அறிவிலிகள் என்றும், விதண்டா வாதக்காரர்கள் என்றும் எழுதும் திமிர்த்தனம் இவர்களுக்கு!


'தினமணி' கட்டுரையில் உண்மை என்பது தப்பித் தவறி ஒரு வரியில்கூட வந்து விடக் கூடாது என்று பூணூலின்மீது 'சத்தியம்' செய்து கொண்டு இருப்பதாகத் தெரிகிறது.


எந்த காலத்திலோ எழுதப் பட்டது. இப்பொழுது என்ன திருப்பித் திருப்பி 'தினமணி' கேள்வி கேட்கிறது.


லோகமான்யர் என்று லோகம் கேட்கும் அளவுக்கு கூச்சல் போடுறார்களே - அந்தப் பால கங்காதர திலகர் என்ன சொன்னார்?


'சுயராஜ்யம் வந்தால் மனுதர்ம நூலை அரசமைப்புச் சட்ட மாகவே ஆக்க வேண்டும் - ஆக்குவோம் என்று கூற வில்லையா?


மகாராட்டிர அரசின் கல்வித் துறை 1994இல் வெளியிட்ட 'சத்திரபதி சாகு சமூக ஜனநாய கத்தின் தூண்!'  ('Chatrapathi Saho the Pillar of Social Democracy') என்ற நூலின் 363-364 பக் கங்களில் என்ன கூறப்பட் டுள்ளது?


'Our Law is Manusmriti and Pointed out that the law (manusmiriti) orders king to administer with the help of Brahmins'  என்றாரே திலகர்


அந்தத் திலகர் மரணித்த போது - அவர் உடல் வைக் கப்பட்ட பாடையைத் தானும் சுமக்க வந்த காந்தியாரை! தொடாதே நீ வைசியன் - சூத்திரன்" என்று பார்ப்பனர்கள் சொன்னதுகூட மனுதர்மத்தின் அடிப்படையில் தானே!


'தினமணி' என்ன சொல்லப் போகிறது? திலகரைக் கை கழுவப் போகிறதா? தீட்சண்யம் மிக்கவர்கள் என்று எழுதுகோல் பிடிக்கப் போகிறதா?


திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்களும், நாகசாமி களும் நாம் வாழும் காலத் திலேயே நாக் கூசாமல் சொன்ன துண்டே! அதுபற்றி 'தினமணி'கள் எப்பொழுதாவது கண்டு கொண்டது உண்டா?


"திருக்குறள் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்வதும், விலக்கியன ஒழிதலும் ஆம்" என்று திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் கூறியது சரி அல்லது தவறு என்று  எழுத கூறுவதற்கு 'தினமணி' முன் வரட்டுமே பார்க்கலாம்.


மனு ஸ்மிருதி மட்டுமல்ல - பகவான் கிருஷ்ணனால் அருளப்பட்டதாக ஆகாயத்தில் தூக்கி வைத்துப் புகழப்படும் கீதையின் யோக்கியதை என்ன?


"பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்" என்று கீதையின் 9ஆம் அத்தியாயம்  - சுலோகம் 32 கூறுகிறதே!


இதை நியாயப்படுத்தி  எழுதுமா தினமணி? பார்ப்பன  சுருதி, ஸ்மிருதி, இதிகாச புராணம் அனைத் துமே இந்நாட்டுப் பெரும்பான்மை மக்களையும், பெண் களையும் மிகக் கெட்டியாக இழிவுபடுத்தி வைப்பது தானே.


பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மை மக்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் இந்த 2020லும் பார்ப்பனர்கள் பூணூல் தரிப்பதும் - ஒவ்வொரு ஆண்டும்.


ஆவணி அவிட்டம் என்ற ஒரு நாளைக் கொண்டாடி, பூணூல் தரிப்பதும் 'நாங்கள் பிராமணர்கள்' தான்  துவிஜாதிக்காரர்கள்தான் - நீங்கள் சூத்திரர்கள்தான் - நாலாஞ் ஜாதிக்காரர்கள்தான் - எங்களின் வைப்பாட்டி மக்கள்தான் என்று அடங்காத் திமிரோடு ஆர்ப்பரிக்கும் கம்பீரத்தோடு மார்தட்டிச் சொல்லுவதாகத்தானே பொருள்!"


'சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி' என்று சும்மாவா சொன்னார் சுயமரியாதை சூரியன் தந்தை பெரியார்!


 


பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்!


மனுநீதி இப்பொழுது ஏது என்போரே  பழையதை இப்பொழுது ஏன் பேச வேண்டும் என்போரே உங்களுக்கு சில கேள்விகள்:


1)            நேற்றைய 'தினமணி'யில் கூட "மனுநீதி வாழ்வியல் நூல்" என்று நடுப்பக்கக் கட்டுரையாக வந்துள்ளதே என்ன பதில்?


2)            மனுவின் சாரம் தான் திருக்குறள் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியும், நாகசாமியும் கூறியதற்கு என்ன பதில்?


3)            மனுதர்ம சாத்திர நூலை டிஜிட்டல் செய்து உலவ விடுவது ஏன்?


4)            அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வரை வாதாடினார்களே - சூத்திரன் தொட்டால் சாமி தீட்டாகும் - செத்து விடும் என்று சொல்லுவதற்கு அடிப்படைக் காரணம் ஸ்மிருதிகள் இல்லையா?


5)            இந்திய அரசமைப்புச் சட்டமாக மனுஸ்மிருதி இருக்க வேண்டும் என்று திலகர் சொன்னது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பா?


6)            சூத்திரன் சந்நியாசி ஆக முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பாகக் கூறியது தற்காலத்தில்தானே!


7)            மனு சொன்ன அந்த ஜாதி, வருணாசிரமம் இன்றுவரை தொடரவில்லையா? ஜாதிகூட மனுதர்மத்தில் சொல்லப்பட்டது தானே - அதை இன்றுவரை கடைப்பிடிப்பது ஏன்? அன்று சொன்னது என்று கருதி தள்ளுபடி செய்யாதது ஏன்?


8)            மனு செத்திருக்கலாம் - அவன் ஊட்டிய சிந்தனை மனநிலை இன்றும் மண்டைகள் இருக்கிறதா இல்லையா?


9)            மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி என்று சொன்ன பேரா. சுந்தரனார் திராவிட இயக்கத்துக்காரரா?


10)         தோழர் திருமாவளவன் கூறியது தன் சொந்த கருத்தா மனுஸ்மிருதிகளில் உள்ள கருத்தா?


11)         திரித்துக் கூறும்  - பிரச்சாரம் செய்பவர்கள்மீது ஏன் நடவடிக்கை இல்லை?


12)         அண்ணா மனு நீதியைச் சாடவில்லையா? அப்படி என்றால் அண்ணா சாடிய அதே  கருத்தை தோழர் திருமாவளவன் சொன்னதற்காக அவர் மீது வழக்கா?


அண்ணாவைக் குற்றவாளி என்று அண்ணா திமுக அரசு கருதுகிறதா? சரக்கு இருந்தால் - அறிவு நாணயம் இருந்தால் பதில் கூறட்டும் பார்க்கலாம்!


Comments