உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தை ‘முட்டாள்’ என்ற நிதிஷ் குமார்

பாட்னா, நவ. 6 சிஏஏ சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று பேசிய, பாஜக தலைவரும் உ.பி. முதல்வருமான சாமியார் ஆதித்யநாத்தை, அவரது பெயரைக் குறிப்பிடாமல் ‘முட்டாள்’ என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் விமர்சித்துள்ளார்.


பீகாரில் பாஜக-வும், நிதிஷ் குமாரும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தேர்தலில் வென்றால், நிதிஷ்குமார்தான் மீண்டும் முதலமைச்சர் என்று கூறி, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் உ.பி. மாநில முதல்வர் ஆதித்யநாத்தும் பீகாரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.அவர், புதன்கிழமையன்று கதிகார் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது, “பீகாரில் பாஜக ஆட்சியமைந்தால் சிஏஏவை அமல்படுத்தி ஊடுருவல் வாதிகளை வெளியேற்றுவோம்” என்று முஸ்லிம்களை குறிவைத்துப் பேசினார். இது, அனைத்து தரப்பினருக்கும் தாங்கள் பொதுவானவர்கள் என்ற பிம்பத்தைக் கட்டிவைத் திருக்கும் அய்க்கிய ஜனதாதளம் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. குறிப்பாக, அய்க்கிய ஜனதாதளம் கட்சிக்கு கிடைக் கும் வாக்குகளிலும் சரிவு ஏற்படலாம் என்று நிதிஷ் குமார் அரண்டு போனார்.


இதையடுத்து, ஆதித்யநாத் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆனால் அவரின் பெயரைக் குறிப்பிடாமல் நிதிஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “யார் இப்படியெல் லாம் விஷமத்தனமாக பிரச்சாரம் செய்வது? யார் இப்படி முட்டாள்தனமாக பேசுவது?'' என்றுகடுமையாக சாடியுள்ளார். அத்துடன், “யார் யாரைத் தூக்கிஎறிவார்கள்? ஒருவருக்கும் அதைச் செய்ய இங்கே துணிவுஇல்லை” என்று குறிப்பிட்டிருப்பதுடன், “அனைவருக்கும் இந்த நாடு சொந்தம். அனைவரும் இந்தியர்களே! அதற்குமாறாக பேசுபவர்கள் பிரிவினையை உண்டாக்குகிறார்கள் அல்லது அவர்களுக்கு வேறு வேலை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்” என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.


Comments