தமிழர் தலைவர் பிறந்த நாளில் அறிவுக் கொடையாக மூன்று நூல்கள்!

* கலி. பூங்குன்றன்


வரும் டிசம்பர் 2 அன்று தனது 88ஆம் ஆண்டு அகவையில் காலடி பதிக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.


பவள விழா ஆண்டு முதல் ஒவ்வொரு பிறந்த நாளிலும் அவரைச் சந்தித்து ஆனந்தம் குதூகலிக்கும் அந்த வாய்ப்பு-இவ்வாண்டு கரோனாவால் தட்டிப் பறிக்கப்பட்டது. எனினும், அந்நாளை சுயமரியாதை நாளாகக் கருதி  - கொண்டாடித்தானே வருகிறோம்.


வெற்று ஆரவார மத்தாப்பு நிகழ்ச்சியல்ல அது. கொள்கைப் பாதையில் - பகுத்தறிவுப் பிரச்சார திசையில் ஒரு மைல்கல்தானே - நமது தலைவர் ஆசிரியரின் பிறந்தநாள்!


அதிலென்ன அய்யப்பாடு! தலைவரின் பிறந்த நாளில் மூன்று நூல்கள் அணி வகுக்கின்றன.


கரோனா வந்ததால் முழங்காலைக் கட்டிப் பிடித்துக் கொண்டு முடங்கி விடவில்லை நமது தலைவர் ஆசிரியர் அவர்கள். பெரும்பாலான நாட்களில் காணொலி மூலம் கருத்து மாரி பொழிந்து கொண்டுள்ளார். கழகத் தோழர்களை சந்தித்துக் கொண்டுதான் உள்ளார்.


கழக நிகழ்ச்சிகளையும் கடந்து பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைக்கும் காணொலியிலும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கிக் கொண்டுதான் இருக்கி றார். இதில் வெளிநாட்டுத் தோழர்கள் ஏற்பாடு செய்த கருத்தரங்குகளும் உண்டு.


அப்படி ஏற்பாடு செய்யப்பட்டதுதான் பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம். அந்நிகழ்ச்சியில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் பேசியதுதான் மனுஸ்மிருதி பற்றியதாகும்.


அது சர்ச்சையாகி விட்டது. ஆத்திரக்கார ஆரியத்தின் அற்பத்தனமான அணுகு முறையால், 'புத்திசாலிக்கு மூன்று இடம்!' என்ற கதையாகி விட்டது. மனுதர்மம் என்றால் என்ன? "சூத்திரனுக்கொரு நீதி - தண்டச் சோறுண்ணும் பார்ப்பானுக்கொரு நீதி" என்ற உண்மை ஊர் உலகத்துக்கெல்லாம் சென்றடையும் ஒரு நிலையை ஏற்படுத்திவிட்டது.


பெண்களை எல்லாம் எவ்வளவுக் கேவலப்படுத்தியிருக்கிறது மனுதர்மம் என்பதை மண்ணுலகம் அறியும்படிச் செய்துவிட்டது.


"பார்ப்பனர்கள் படித்தவர்களே தவிர அறிவாளிகள் அல்ல" என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னதைத் தங்களுக்குத் தாங்களே முகத்திரையைக் கிழித்துக் கொண்டு அம்பலமாக்கிக் கொண்டது ஆரியம்.


காணொலியில் கழகத் தலைவர் பல அரிய தலைப்புகளின் கீழ் கருத்துக் கருவூலங்களை வழங்கினார்.


அதில் மிகவும் குறிப்பிடத்தக்க தலைப்பு "ஒப்பற்றத் தலைமை" - தந்தைபெரியார் தம் தலைமையின் தகத்தகாய மகுடத்தில் பேரொளியாகும்.


95 ஆண்டில் முக்கால் நூற்றாண்டுப் பொது வாழ்வின் சொந்தக்காரராகிய தந்தை பெரியார்தம் வாழ்நாளில் யாரும்   சந்தித்திராத எதிர்ப்பு எரிமலைகள், கேவலமான அர்ச்சனைகள், துரோகப் படலங்கள் - போராட்டங்கள் - சிறைவாசங்கள் - வெற்றிமாலைகள் என்று பன் மணித்திரளாக ஜொலிப்பவர் தான் பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் அவர்கள்.


அவற்றை அரும்படப்பிடிப்பாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் தமிழர் தலைவர். அந்த அய்ந்து நாள் பொழிவுகள் 'ஒப்பற்றத் தலைமை' எனும் தலைப்பில் ஒப்பற்ற நூலாக வெளிவரவிருக்கிறது.


இரண்டாவது நூல் "வாழ்வியல் சிந்தனைகள் - 15"


"தி.க.காரர்களா? கடவுள் மறுப்பாளர்கள். மதத்தை நார் நாராகக் கிழிப்பவர்கள். புராணங்களை, இதிகாசங்களை, வேதங்களை, ஸ்மிருதிகளை உண்டு இல்லை என்று ஒரு கை பார்ப்பவர்கள்!


பிள்ளையார் சிலைகளை உடைத்தவர்கள் ஆயிற்றே! ராமன் படத்தை எரித்தவர்கள் ஆயிற்றே! இவர்களின் தலைவர் வாழ்வியல் சிந்தனைபற்றி எழுதுகிறாரா?


குழந்தைகள் வளர்ப்புப் பற்றிக் குறிப்பிடுகிறாரா? முதியோர் நலன்பற்றி எல்லாம் பேசுகிறாரா?


மருத்துவக் குறிப்புகளைத் தருகிறாரா? குடும்ப வாழ்வின் கூறுகள்பற்றி எல்லாம் குறிப்பிடுகிறாரா?


அரிய நூல்களிலிருந்து அரும் கருத்துகளைத் தேடித் தேடி அள்ளிக் கொண்டு வந்து கொட்டுகிறாரா?" என்று மூக்கின்மீது விரலை வைத்துப் பேசுபவர்களைப் பார்க்க முடிகிறது.


அத்தகையவர்களுக்கு ஒன்று தெரிவதில்லை. பெரியார் கொள்கைகள் என்பவைகளே வாழ்வியல் சிந்தனைகள்தாம்! நலமான வாழ்வுக்குத் திறவுகோல்தான். மூடத்தனச் சேற்றிலிருந்து முற்றிலும் எழுந்து வந்து மனிதனிடம் குடிகொண்டு இருக்கும் விலை மதிப்பிட முடியாத மூலதனமான மூளைத்தனத்தை முற்றிலும் பயன்படுத்து  - நீ முன்னேற்றத்தின் உச்சிக்குச் சென்றிடுவாய் எனும் வாழ்வியலின் உயிர்க் காற்றை அடையாளம் காட்டும் கொள்கைகளும், தத்துவங்களும், சித்தாந்தங்களும்தான் தந்தை பெரியார் அவர்களின் "சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு" என்பதாகும்.


தந்தை பெரியார் அவர்களின் வாழ்வியல் கொள்கைகளைப் பழுதறப் பின்பற்றினால் நேரம் காலம் மிச்சம். அதனால் பொருளாதார இழப்பு என்ற பேச் சுக்கே இடமில்லாத நிலை - தன்னம்பிக்கை செல்வம் வந்து சேரும்.  இதன் காரணமாக மூடநம்பிக்கையின் சங்கிலி நம்மைத் தளைப்படுத்துவதிலிருந்து விடுதலை கிடைக்கும். ஆண் பெண் சமத்துவம் என்ற   மகிழ்ச்சிப் பந்தலில் தேனாற்றில் ஊஞ்சலாடும் - பிறர்நலம் பேணும் - ஏற்றத் தாழ்வு என்ற இருள் இருக்கும் இடம் தெரியாமல் மாண்டோடும் - சமத்துவ சம நிலை சமூகத்தால்  ஒப்புரவு வாழ்வால், பொறாமை - பகைமை - வெறுப்பு எனும் கொடு நோய் ஒழியும் - மனிதம் என்பதற்கான முழு அர்த்தம் கிடைக்கும். ஆம்!  தந்தை பெரியார் கொள்கை என்பது ஒரு வாழ்க்கை நெறி!


இவ்வளவு செல்வங்களின் மகரந்தங்களை, கூறுகளை 'விடுதலை' ஆசிரியர் மானமிகு கி. வீரமணிஅவர்கள் நாள்தோறும் வாழ்வியல் சிந்தனைகளாக அள்ளிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.


வாழ்வியல் சிந்தனைகள் என்னும் இந்தப் பகுதி புதிய புதிய வாசகர்களை 'விடுதலை'க்குக் கை பிடித்து அழைத்து வந்திருக்கிறது. இந்தப் பகுதியின் பூக்காட்டு மணத்தை நுகர்ந்திட -  உலகம் முழுவதும் தமிழ் வாசகர்கள் பெருகி வருகின்றனர்.


"வாழ்வியல் சிந்தனைகள்" எனும் பெயரால் இதுவரை 14 தொகுப்புகள் வெளி வந்துள்ளன. 15 ஆம் தொகுப்பு - ஆசிரியர் அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாளான டிசம்பர் 2ஆம் தேதி வெளிவரவிருக்கிறது.


ஆங்கிலத்தில் இத்தொகுதிகள் வெளி வந்தால் (வரும்) - அதில் ஒன்றும் அய்யமில்லை! இன்னும் நுகர்வோரின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் உலகளவில் உயரும் - உலகம் முழுவதும் பேசப்படும் தொகுதிகளாகவும் மலரும்.


மூன்றாவது நூல் பேராசிரியர் அருணன் அவர்களால் "காலந்தோறும் பிராமணியம்" எனும் தலைப்பில் எழுதிய எட்டு தொகுதிகள், திராவிடர் கழகத்தைப்பற்றிக் குறிப்பிடப்பட்ட சில பகுதிகள் தொகுக்கப்பட்டு "ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்" எனும் தலைப்பில் கழகத்தின் வெளியீடாக வெளிவருகிறது. திராவிடர் கழகத் தலைவரின் பிறந்த நாளில்.


பொதுவுரிமை என்பது பொதுவுடமைக்கு  முன்னோட்டம் என்னும் தடத்தில் உழவு செய்தவர் தந்தை பெரியார். மார்க்ஸ் - ஏங்கல்ஸ் அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்து, முதன் முதலில் தமது 'குடிஅரசு' வார இதழில் வெளியிட்டவர் தந்தை பெரியாரே!


தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கமான திராவிடர் கழகமும், பொதுவுடமை இயக்கமும் இரண்டு தண்டவாளங்கள் - முரண்பாடுகளுக்கும், மோதல்களுக்கும் இடமில்லை.


இடைஇடையே விமர்சனங்கள் வந்திருக்கலாம்.


அவை ஆரோக்கியமானவையே.


இந்நூலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணன் அவர்கள் தந்தை பெரியார் பற்றியும், கழகத் தலைவர் ஆசிரியர் பற்றியும், திராவிடர் கழகத்தைப் பற்றியும் எழுதிய சில பகுதிகளை எடுத்து "ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்" எனும் நூலாக, திராவிடர் கழக வெளியீடாக டிசம்பர் 2ஆம் தேதி வெளி வருகிறது - வெளி வருகிறது!


மூன்று நூல்களின் அடக்கம் ரூ.540 என்றாலும் கழகத் தலைவரின் பிறந்த நாளான  டிசம்பர்  2இல் வெளியீட்டு விழாவில் ரூபாய் 400க்குக் கிடைக்கும்.


முன் கூட்டியே - (டிசம்பர் 2க்குள்) பதிவு செய்து கொண்டால் அவர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும்.


நாம் சேர்த்து வைக்கும் செல்வங்களுள் விலை மதிக்கப்பட முடியாதவை நூல்கள்தானே! அதுவும் தந்தை பெரியார் தொடர்பானவை என்றால் சாதாரணமானவையல்ல.


பயன் பெறுவீர்!


பலன் பெறுவீர்!


தமிழர் தலைவர்தம் இவ்வாண்டுப் பிறந்த நாளின் அறிவுக் கொடை இம்மூன்று நூல்களே!


Comments