அதிகாரம் இல்லாத இடங்களிலும் அதிகாரம் செலுத்தும் ஆர்.எஸ்.எஸ்.

இந்தியாவின் மத்திய மாநிலங்களின் அடர்ந்த வனப் பகுதிகளில் மவோயிஸ்டுகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு அப்பகுதிகளுக்குச் சென்ற அருந்ததி ராய், மாவோயிஸ்டுகளின் அனுபவத்தையும், ஆயுதம் ஏந்துவதற்கு அவர்கள் சொன்ன காரணங்களையும் தொகுத்து 'Walking With The Comrades' என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். இந்தப் புத்தகம் 2011இல் வெளியிடப் பட்டது.


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில், முதுகலை ஆங்கில மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில், 2017ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக வல்லுநர்கள் குழுவின் வழிகாட்டுதலுக்கு இணங்க இது சேர்க்கப்பட்டது.


இந்நிலையில் கடந்த வாரம் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்த சிலர் பல்கலைக்கழக துணைவேந்தர் கே. பிச்சுமணியை நேரில் சந்தித்து இந்த புத்தகத்தைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்தனர்.


இது குறித்து அவர்கள் துணைவேந்தரிடம் அளித்த மனுவில், 'கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் பாடம் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் இடம்பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் மீது நேரடியாக நக்சல் மற்றும் மாவோயிச கருத்துகள் திணிக்கப்பட்டு வந்துள்ளன. தேச விரோத கருத்துகளைத் தெரிவிக்கும் இந்தப் புத்தகத்தை பாடத் திட்டமாகச் சேர்த்த பல்கலைக்கழக நிர்வாகத்தை ஏபிவிபி மாணவர் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. இது தொடர்பாகப் பல்கலைக்கழக நிர்வாகம் மன்னிப்பு கேட்பதோடு மட்டுமல்லாமல், பாடத் திட்டத்திலிருந்து உடனடியாக புத்தகத்தை நீக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டிருந்தது.


இந்நிலையில்தான் தற்போது அந்தப் புத்தகம் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அந்தப் புத்தகத்துக்குப் பதிலாக மா. கிருஷ்ணன் எழுதியிருக்கும் 'My Native Land: Essays on Nature' என்ற புத்தகம் சேர்க்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக பிபிசியிடம் பேசிய ஏபிவிபியின் மாநில இணை செயலாளர் விக்னேஷ் "மூன்று வருடங்களாகப் புத்தகம் இருந்தாலும் எங்களுக்குத் தெரியவில்லை. இப்போது அங்கே படித்து வரும் எங்கள் அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர்தான் இப்படி ஒரு புத்தகம் பாடத் திட்டத்தில் இருப்பதை எங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தார். இது மாணவர்களுக்குத் தவறான கருத்தைப் பரப்பும் விதமாக இருக்கும் என்பதால் அதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன் பின்னர் விசாரித்த துணைவேந்தர் உடனடியாக அந்தப் புத்தகத்தை நீக்கியிருக்கிறார்" என்றார்.


"இதற்கிடையில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் பாடத் திட்டங்களில் நமது கலாச்சாரத்திற்கு எதிரான நூல்கள் உள்ளதா என்று ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். அதற்காக அந்தந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள், எங்கள் இயக்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் போன்றவர்களை வைத்து குழுக்களை அமைக்க முடிவெடுத்துள்ளோம். இவர்கள் அந்தக் கல்லூரியின் பாடத் திட்டத்தைக் கண்காணிப்பார்கள்," என பிபிசியிடம் தெரிவித்தார் ஏபிவிபியின் விக்னேஷ்.


ஒரு புத்தகம் பாடத்திட்டத்தில் இடம்பெற பல நடைமுறைகளைத் தாண்ட வேண்டும் எனச் சுட்டிக்காட்டும் பேராசிரியர் வசந்திதேவி, எதிர்ப்பு வந்தவுடன் நீக்குவது சரியல்ல என்கிறார். "ஒரு புத்தகம் பாடத் திட்டத்திற்கு உள்ளே வர நீண்ட நடைமுறைகள் இருக்கின்றன. முதலில் 'போர்ட் ஆப் ஸ்டடிஸ்'-இல் விவாதிப்பார்கள். அதற்குப் பிறகு, அகாடமிக் கவுன்சில், செனட் ஆகியவற்றின் ஒப்புதல் பெற வேண்டும். இதற்குப் பிறகுதான் மாணவர்களுக்கு ஒரு புத்தகம் பாடமாக வைக்கப்படுகிறது. இப்படி ஒரு எதிர்ப்பிற்காகப் புத்தகங்களைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்குவது, சுதந்திர சிந்தனையின் வேர்களிலேயே வெந்நீரைப் பாய்ச்சுவதைப் போல" என்கிறார் அவர்.


மத்திய அரசால் பல முறை தடைக்கு ஆளான ஓர் அமைப்பு - அதிகாரம் இல்லாத இடங்களிலும் அதிகாரம் செலுத்துவது அதிர்ச்சிக்குரியது.


நூல்களைத் தடை செய்வது, எழுத்துரிமை, பேச்சுரிமை களைப் பறிப்பது என்பது எல்லாம் பச்சையான பாசிசமே!


புராணம் மற்றும் இதிகாசங்கள் மூடநம்பிக்கைகளையும், ஒழுக்கக் கேடுகளையும் கற்பிக்கவில்லையா? இவற்றை நீக்க வேண்டும் என்று பகுத்தறிவுவாதிகள் கோரிக்கை வைத்தால் பல்கலைக் கழகங்கள் நீக்குமா?


அண்ணா பெயரில் கட்சியையும், ஆட்சியையும் நடத்தும் ஒரு மாநிலத்தில் இத்தகைய அவல - அடிமை நிலையா? வேதனைக்கும், வெட்கத்துக்கும் உரியது!


Comments