‘விடுதலை' சந்தா சேர்ப்பில் தேனீக்கள் போல் பறந்து பணியாற்றும் கழகத் தோழர்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை

‘விடுதலை' விளைச்சலைப் பெருக்குவோம்!


விஷம ஆரிய ஆதிக்கத்தின்  வேரறுப்போம்!கரோனா காலத்திலும் தேனீக்கள்போல் ‘விடுதலை' சந்தா சேர்ப்பில் பறந்து பறந்து பணியாற்றும் கழகத் தோழர்களைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ள கழகத் தலைவர், ‘விடுதலை' ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘விடுதலை' விளைச்சலைப் பெருக்கி, விஷ ஊற்றான ஆரிய ஆதிக்கத்தின் வேரையறுப்போம் என்ற சூளுரையையும் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளார்.


அறிக்கை வருமாறு:


வீடுகள் தோறும் ‘விடுதலை' (சந்தா சேர்க்கும்) வீரர்கள் என்ற செய்தி கேட்டும், படங்களை ‘விடுதலை' ஏட்டில் பார்த்தும் மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்கிறோம்!


10 மணிநேரத்தில் கும்பகோணத்தில் 77 ‘விடுதலை' சந்தாக்களையும், அதேபோல், அதனைப் போட்டியில் பின்னே தள்ளுவதற்கொப்ப, பட்டுக்கோட்டை மாவட்டத்தில் 10 மணிநேரத்தில் 112 ‘விடுதலை' சந்தாக்களையும் - ஆரோக்கியமான விரும்பத்தக்கப் போட்டி கழகப் பிரச்சாரப் பணியில் இப்படி இருப்பது தொடர்வளர் பருவத்தில் கழகம் ஓய்வின்றி உழைக்கிறது!


எப்படிப் பாராட்டுவதோ!கழக உறவுகள் மக்கள் தொடர்புடன் கட்சி, ஜாதி, மதம் இவற்றைத் தாண்டிய ‘யாவரும் கேளிர்' என்ற சமத்துவ சுயமரியாதை சமூகம் சமைக்க ‘விடுதலை'யை - காகிதமாக அல்ல - ஆயுதமாக - அறிவாயுதமாக - மொழி, இன பண்பாட்டுக் கேடயமாக ஆக்கி நாளும் பாசறை வீரர்கள் பாடி வீட்டிலிருந்து ‘விடுதலை' பரணி பாடி தரணி எங்கும் சுற்றுச் சுழன்று ‘விடுதலை'யின் விளைச் சலைப் பெருக்குவதை எப்படிப் பாராட்டுவது என்பதே புரியவில்லை தோழர்களே!


குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து


மானங் கருதக் கெடும். (குறள் 1028)


என்று நம் அறிவுத் தந்தையின் அகத்தில் அமர்ந்து வழிகாட்டும் குறள் நெறிக்கேற்ப கொட்டும் மழையா? கொளுத்தும் வெயிலா? படரும் பனியா? தொடரும் புயலா? என்பது பற்றியெல்லாம் லட்சியம் செய்யாது தொண் டறத்தைத் தோளில் சுமக்கும் எமது தோழர்களான உங்களின் பேருழைப்பால் நம் இலட்சிய விதைகள் செழிப்புடன் வளரும் என்ற நம்பிக்கை நாளும் பெருகுகிறது! கரோனா காலத்திலும்கூட இப்படி ஒரு இடைவிடாத சலிப்பின்றி சரித்திரப் புகழ் சாதனையா? வியப்பு! வியப்பு!! வியப்பு!!!


‘விடுதலை' விளைச்சலைப் பெருக்குவோம்!


இதற்கு ஒரே மூல ‘சூத்திரம்' - விதி - ‘‘நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது; வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்'' என்பதுதானே!


‘விடுதலை' விளைச்சலைப் பெருக்குவோம்!


விஷம ஆரிய ஆதிக்கத்தின் வேரறுப்போம்!


விரைவீர்! விரைவீர்!! பணி செய்ய விரைவீர் வீரர்களே, வீராங்கனைகளே!


‘விடுதலை'  சந்தா சேர்ப்பு வெறும் நிகழ்வல்ல -


வீறுகொண்ட இன எழுச்சியின் விடிவெள்ளி!


மறவாதீர்! தொடர்க பணியை!!


விடற்க முயற்சியை!!!!


நன்றியுடன்,


உங்கள் தொண்டன்,


 


கி.வீரமணி,


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


18.11.2020


Comments