சட்ட எரிப்பு வீரர்களுக்கு வீர வணக்கம்!

நேற்று (26.11.2020) இந்தியாவில் சட்ட நாள் அனுசரிக்கப்பட்டது. 1949 நவம்பர் 26 அன்று தான் அரசியல் நிர்ணய சபை - இந்திய அரசமைப்புச் சட்டம் பிறப்பு எடுத்த நாள்.


ஆம், அதே நவம்பர் 26 - 1957ஆம் ஆண்டு தான் தந்தை பெரியார் ஆணைப்படி இந்திய அரசமைப்புச் சட்டம் கொளுத்தப்பட்ட நாளுமாகும்.


ஏன் கொளுத்தினார்கள்? எதற்குக் கொளுத்தினார்கள்? வீண் வம்புக்கா - விளம்பரம் பெற வேண்டும் என்ற ஆசைக்கா? அல்ல அல்ல -


அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதே ஜனநாயக விரோதமானது என்பது தந்தை பெரியாரின் கணிப்பு.


வெகு மக்களுக்கு வாக்குரிமை இல்லாத கால கட்டத்தில் குறிப்பிட்டவர்களுக்கே வாக்குரிமை என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டதுதான் அரசியல் சட்ட நிர்ணய சபை.


இந்த நிலையில் இந்த அரசியல் சட்ட நிர்ணய சபை அனைத்து மக்களையும் எப்படி கட்டுப்படுத்தும் என்ற அறிவார்ந்த அடிப்படைக் கேள்வியை எழுப்பியவர் தந்தை பெரியார்.


அதற்கு மேலும் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் பெரும்பான்மையினர் பார்ப்பனர்கள். டாக்டர் அம்பேத்கர் முகம்மது சாதுல்லாவைத் தவிர மீதி நால்வரும் - பார்ப்பனர்களே!


எனவே மனுதர்மத்தின் மறுபதிப்பே அரசியல் சட்டம் என்று இந்தியாவிலேயே யாரும் சொல்லத் துணிவில்லாத காலகட்டத்தில் தொலைநோக்கோடு ஓங்கி அடித்துச் சொன்னவர் தந்தை பெரியார்.


அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுத் தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்கர் அவர்களே, மன திருப்தி அடையும் வகையில் உருவாக்கப்படவில்லை என்று தம் அதிருப்தியையும் வெளியிடத் தவறவில்லை.


ஆந்திர மசோதா பற்றிய விவாதம் இந்திய மாநிலங்களவையில் நடைபெற்றபோது - சட்ட வரைவுக் குழுத் தலைவர் டாக்டர் அம்பேத்கரே கூறினார்.


“என்னுடைய நண்பர்கள் கூறினார்கள். ‘நீதானே சட்டத்தை ஏற்படுத்தினாய்?' என்று கேட்டார்கள். இப்பொழுது நான் கூறுகிறேன்.


அந்தச் சட்டத்தைக் கொளுத்துவதிலும் நான்தான் முதன் மையானவனாக இருப்பேன் - சட்டத்தை முற்றிலும் நான் வெறுக் கிறேன் - அச்சட்டம் பொருத்தமானதல்ல” என்று அறிவு நாணயத் தோடு அவையோர் அதிர்ச்சி அடைய முழங்கினார் டாக்டர் அம்பேத்கர்.


அவர் சொன்னார் - அதனை செயலில் காட்டியவர் தந்தை பெரியார்.


1957 நவம்பர் 3இல் தஞ்சாவூரில் நடைபெற்ற திராவிடர் கழக (ஸ்பெஷல்) மாநாட்டில் 4 லட்சம் மக்கள் முன்னிலையில் கொட்டும் மழையிலே, கொள்கைச் சீற்றமாக ஒரு தீர்மானம் முன்மொழி யப்பட்டது.


மதப் பாதுகாப்பு என்ற போர்வையில் ஜாதியை - பாதுகாக்கும் பிரிவுகளைக் (13(2), 25(1), 26, 29(1), (2), 368) கொளுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.


உலகில் அதுவரை எங்குமே கேள்விப்படாத போராட்டமாக, ஆட்சியாளர்கள் அதிர்ந்தனர். பார்ப்பனர்கள் பதற்றப்பட்டனர்.


பெரியாரை நாடு கடத்த வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் பேசியவர்களும் உண்டு.


தஞ்சையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து இரண்டு நாள் இடைவெளியில் அவசர அவசரமாக ஒரு சட்டத்தை நிறைவேற்றினர். சட்டத்தைக் கொளுத்தினால் 3 ஆண்டுகள் வரை தண்டனை என்பது அந்தச் சட்டம்.


அதைக்கண்டு அஞ்சவில்லை - மூன்று ஆண்டுகள் அல்ல, முப்பதாண்டுகள் என்றாலும் சட்ட எரிப்புப் போராட்டம் நடந்தே தீரும் என்று அறிக்கை வெளியிட்டார் அரிமாவாம் தந்தை பெரியார்.


போராட்ட வீரர்களின் பட்டியல் ‘விடுதலை'யில் நாள்தோறும் வெளிவந்து கொண்டே இருந்தது.


ஆம், 1957 நவம்பர் 26 அன்று 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகப் போராட்டத்தில் குதித்தனர். கண் பார்வையற்ற சிறீரங்கம் மகாமுனி என்ற தோழர் உட்பட 10 ஆயிரம் பேர் கொளுத்தினர். மூவாயிரம் பேர் கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் வரை தண்டனை அளிக்கப்பட்டனர்.


சிறைக் கொடுமையால் சிறையிலேயே வீர மரணம் தழுவியவர்கள் உண்டு, வெளியில் வந்த சில நாள்களிலேயே, சில வாரங்களிலேயே 80 தோழர்கள் மரணமடைந்தனர்.


மன்னிப்பு எழுதிக் கொடுத்தால் விடுதலை என்று நப்பாசை ஊட்டப்பட்டதுண்டு. தந்தை பெரியாரின் தொண்டர்களா, கருஞ்சட்டை மாவீரர்களா மயங்குவார்கள்? மார்தட்டி ‘வேறு ஆளைப் பார்!' என்று கர்ச்சித்தவர்கள் கழகத் தோழர்கள்.


சிறையிலேயே குழந்தைகளை ஈன்றெடுத்த வீராங்கனைகள் உண்டு. சிறைப்பறவை என்றும், சிறைச் செல்வி என்றும் பெயர் சூட்டப்பட்ட வரலாறு எங்கே உண்டு? எங்கே உண்டு? என்று சவால்விட்டுக் கேட்க முடியும் - சரித்திரம் படைக்கும் இந்த இயக்கத்தால்!


ஜாதி ஒழிப்புக்காக சிறைபுகுந்த சிறையிலே இன்னுயிரை ஈந்த - நோயோடு சிறையிலிருந்து வெளிவந்த - குறுகிய காலத்திலேயே மரணம் அடைந்த - குடும்பத்தைத் தவிக்கவிட்டு, வெஞ்சிறை ஏகிய அந்த மாவீரர்கள் அனைவருக்கும் மானமிகு வீர வணக்கத்தை இந்த நாளில் (நவம்பர் 26) தலைதாழ்த்தி செலுத்துவோம்! செலுத்துவோம்!


ஜாதி ஒழிப்புக்காக எந்த ஈகத்தையும் ஈந்திட உறுதி ஏற்போம்! ஏற்போம்!!


வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!


Comments