சமூக வலைதளம் மூலம் சிறுமிகள், பெண்களின் தரவுகள் திருட்டு

சமூக வலைதளமா? சமூக விரோதக் களமா?


அய்.நா. பெண்கள் அமைப்பு எச்சரிக்கை


ஜெனீவா, நவ.16 கரோனா தொற்று நோய் பரவல் காரணமாக இணையதள பயன்பாடு அதிகரித்திருக்கும் நேரத்தில், சிறுமிகள் மற்றும் பெண்களின் இணையம் தரவுகளைக் கொண்டு அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அய்.நா. மனித உரிமை ஆணையம் எச்சரித்துள்ளது.


அனைத்து நாடுகள் மற்றும் இணையதள நிறுவனங்களை எச்சரித்த அய்.நா.வின் பெண்கள் உரிமைக் குழு தரவுகளைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வலியுறுத்தியுள்ளது.


சிறுமிகள் மற்றும் பெண்கள் இணைய தளத்தைப் பயன்படுத்துவது அதிகரித் துள்ளதால் அவர்களின் தரவுகளை சமூக வலைத்தளங்கள் மூலம் சேகரித்து கள்ளச் சந்தையில் விற்று பணமாக்கும் கும்பலும் அதிகரித்திருக்கிறது எனவும், இதனால் பெண்களுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட குற்றங்களும் அதிகரித்திருப்பதாகக் கூறியது.


இந்த தரவுகளின் அடிப்படையில் பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டு பாலியல் குற்றங்களுக்குத் தூண்டும் இந்த கும்பலால் சிறுமிகளுக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்று கூறிய அக்குழு,


செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த தரவுகள் திருடப்படாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தரவுகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் உள்ளது என்றும் கூறியுள்ளது.


உலக நாடுகளின் அரசுகள் தரவுகளையும் நிறுவனங்களையும் கட்டுப்படுத்த தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க அந்த குழு வலியுறுத்தியுள்ளது.


Comments