“அரே ராமா அரே கிருஷ்ணா” அட்சய பாத்திரா ஊழல்

பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கிவரும் அட்சய பாத்திரா அறக்கட்டளையின் தணிக்கை வரவு  - செலவில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகக் கடும் குற்றச்சாட்டுகள் எழும்பியுள்ளன. இதனைத் தொடர்ந்து அந்த அறக்கட்டளையின் 4 உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.


பெங்களூருவைச் சேர்ந்த அட்சய பாத்திரா அறக்கட்டளை தமிழ்நாட்டிலும் காலை உணவு வழங்கும் திட்டத்தில் சமீபத்தில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு அட்சய பாத்திரா அறக்கட்டளைக்கு வழங்கியது.


அட்சய பாத்திரா என்ற தனியார் அறக்கட்டளை 20 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 11, 2000 அன்று பெங்களூருவில் தொடங்கப்பட்டது. இது இஸ்கான் அமைப்பு மற்றும் சில இந்துத்துவ அமைப்புகளின் பிரிவாக செயல்படுகிறது.


2019-20ஆம் ஆண்டில் அட்சய பாத்திரா அறக்கட்டளை ரூ.248 கோடியை அரசு மானியமாகவும், ரூ.352 கோடியை நன்கொடைகளாகவும் பெற்றிருக்கிறது. 2025ஆம் ஆண்டுக்குள் 50 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் பணியை எடுத்துக் கொள்வதாக இந்த அறக்கட்டளை இணையதளத்தில் தகவல்கள் உள்ளன.


ஏற்கனவே இந்த அறக்கட்டளையின் நிதி முறைகேடு தொடர்பாக பல புகார்கள் எழுந்தாலும் அவை அனைத்தும் போலியானவை என்று கூறப்பட்டு வந்தது.


 இந்த நிலையில் அதன் தலைமை நிர்வாகிகள் “மிக முக்கியமான நிர்வாகப் பிரச்சினைகள் பற்றி பல முறை எழுத்துப்பூர்வமாக முன் வைத்த பிறகும், அவை தீர்க்கப்படவில்லை. மோசமான நிர்வாக பிரச்சினைகளைத் தீர்க்காமல் இருந்ததாலும், சுயேச்சையான அறங்காவலர்களுக்குப் பதிலாக நிர்வாகத் தரப்பு நபர்களை பெரும்பான்மையாக நியமிப்பதாலும் வேறு வழியின்றி பதவி விலகியுள்ளோம்.” என்று கூறியுள்ளனர்.


அட்சய பாத்திராவின் தணிக்கைக் குழுவின் 7 பக்க அறிக்கையிலிருந்து இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவரங்களை வெளியிடுவதாக “டைம்ஸ் ஆப் இந்தியா” தெரிவிக்கிறது. அதன்படி, அடிப்படையான நிதிக் கட்டுப்பாடுகள் இல்லாமை, நிதி ஒழுங்கு இல்லாமை, அறக்கட்டளைக்கும், கோயில் அறக்கட்டளைகளுக்கும் இடையே போதுமான இடைவெளி இல்லாமை, தணிக்கை முறைகளும் இல்லாமை ஆகியவற்றை தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.


ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை, இஸ்கான், டச்ஸ்டோன் அறக்கட்டளை போன்ற கோயில் அறக்கட்டளைகளின் முக்கியமான நிர்வாகிகள் அட்சய பாத்திரா அறக்கட்டளையிலும் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்.


, அட்சய பாத்திரா வழங்கும் உணவுக்கான செலவு, பிற நிறுவனங்கள் வழங்கும் அதே போன்ற உணவுக்கான செலவை விட அதிகமாக இருப்பதை தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. “சமையல் கூடங்களை நடத்தும் கோயில் அறக்கட்டளைகள் அட்சய பாத்திரா அறக்கட்டளைக்கு பொறுப்பாக பதில் சொல்லுவதில்லை” என்று தணிக்கைக் குழு குற்றம் சாட்டுகிறது.


“பல்வேறு அட்சய பாத்திரா மய்யங்களில் இருந்து முறைகேடுகள் பற்றி புகார்கள் எங்களுக்கு வந்தன. ஆய்வு செய்து பார்த்ததில் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்று உறுதி செய்யப் பட்டுள்ளது  ஊழல் தொடர்பானகேள்விகளுக்கு சரியான பதிலை அறக்கட்டளை நிர்வாகம் தரவில்லை” என்று தெரிவித்திருக்கிறார் பதவி விலகிய மற்றொரு உறுப்பினர்.


பூண்டு, வெங்காயம் மற்றும் மண்ணுக்குள் விளையும் எந்த பொருட்களையும் சேர்க்க மாட்டோம், அப்படி சேர்ப்பது தீய எண்ணங்களை வளர்க்கும் என்று கூறிக்கொண்டு திரியும் அட்சய பாத்திரா அமைப்பினர் ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.


 தமிழகமும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களுக்கு இடம் வழங்கி, மாநகராட்சிபள்ளிகளுக்கு உணவு வழங்க அனுமதி கொடுத்துள்ளது. பிரதமர் மோடி 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த அமைப்பின் ரூ.300 கோடி மதிப்பிலான மதிய உணவு திட்டத்தை மைசூருவில் துவங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்துத்துவா பின்னணி கொண்ட இந்த அமைப்பின் ஊழல்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டாமா?


Comments