‘ஞானோதயம்!'
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி, விடுதி கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ளும்: - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.
காலம் கடந்த 'ஞானோதயம்' என்றாலும், வரவேற்கத்தக்கதே! முந்திக் கொண்டிருந்தால் முதல் பரிசு கிடைத்திருக்கும். வின்னருக்குப் பதில் கிடைத்திருப்பது ரன்னர் கப்தான்!
பொம்மை விளையாட்டா?
திருப்பதி மலையப்ப சாமிக்கு 14 வகை மலர்களால் 7 டன் பூக்கள் மலரஞ்சலி யாகம்!
பெரியவர்களின் குழந்தை பொம்மை விளையாட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட பூக்கள்
7 டன்னாம்!
அஞ்சல்
வாக்கு!
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்குப் புதிய தபால் வாக்கு அறிமுகம்.
தபாலுக்கு இன்னொரு சொல் தமிழில் அஞ்சல் துறை.
அஞ்சுகின்ற முறை கூடாதல்லவா! குறிப்பாக பீகார் தேர்தல் (உ)பயம்!
‘வேல் யாத்திரை!'
வேலை இல்லாத் திண்டாட்டத்தை மறைக்கவே வேல் யாத்திரை: - சி.பி.எம். குற்றச்சாட்டு.
இதுவும் ஒரு வேலைதான் - வேலை வாய்ப்பும்தானே! ஒருவேளை இந்த அர்த்தத்தில்தான் இருக்கலாம்.
அரசு இயல்தானே!
அரசு செலவில் அரசியல் செய்யலாமா? -இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி.
அரசு இயல்தானே அரசியல் என்று விளக்கம் சொன்னாலும் சொல்லுவார்கள்.
வாழ்க அண்ணா ‘‘நாமம்!''
அமித்ஷாவுக்கு விநாயகர் சிலை, தில்லை நடராஜர் சிலை - முதலமைச்சர், துணை முதலமைச்சர் அளித்த நினைவுப் பரிசுகள்.
ஹிந்துத்துவாவின் கட்சியோடு கூட்டணி ஆயிற்றே!
வாழ்க அண்ணா ''நாமம்!''
நியாயமான
தள்ளுபடி!
அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு. மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும்: - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு.
அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடம் அளிக்கலாம் என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், தமிழ்நாடு அரசின் மனு மிகவும் நியாய - சட்டப்பூர்வமானதே!
சமரசம் உலவும்
இடம் எது?
உயர்கல்வியில் இட ஒதுக்கீடு முறையால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய ஜாதியினர் பாதிக்கப்படக் கூடாது: - நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன்.
இட ஒதுக்கீடு முறையால் உயர்கல்வி பெற்றவர்கள் சமூகப் பின்னணி முக்கியம் இல்லையா? இத்தகையவர்கள் தகுதிமிக்கவராகப் பணியாற்றவில்லையா?