ஆசிரியர் விடையளிக்கிறார்


கேள்வி : அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீது விசாரணைக் குழு அமைத்தும், அவரை பணி இடைநீக்கம் செய்யாமல் இருப்பது ஏன்? மற்ற பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு இப்படி ஒரு சூழல் வந்தால்,  பணி நீக்கம் செய்யாமல் இருப்பார்களா?


- செந்தில், மருவத்தூர்


பதில் : ஏற்கெனவே அதே அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த மன்னர்ஜவகர் மீது விசாரணை நடந்தபோது அவர் பதவி விலகி இருந்தாரா இல்லையா? இவரை அங்கே வைத்துக் கொண்டு விசாரணை நடத்தினால், உண்மையான தகவல்கள் எளிதில் வெளிவர தயக்கம் ஏற்படுமா ஏற்படாதா? ஆவணங்கள் காணாமற் போக வாய்ப்பு ஏற்படுமா இல்லையா? தவறான முன்மாதிரி ஆகிவிடக் கூடாது.


கேள்வி : பீகார் தேர்தல் முடிவுகளை பார்த்த பிறகாவது அதிமுக பாடம் பெறுமா?


- தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை   


பதில் : ''மடியில் கனம்; வழியில் பயம்'' இந்த நிலையில் பாடமாவது, புடலங்காயாவது!


கேள்வி : பிஜேபியின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் பீகார் முதல்வர்  நிதிஷ்குமாரின் ஆட்சி சமூகநீதிப் பாதையில் பயணிக்குமா?


- எஸ். பத்ரா, வந்தவாசி


பதில் : ஆடும் நாற்காலியில் அமர்ந்துள்ள அவரால், சுதந்திரமாக எதையும் செய்யவே முடியாது. அவர் பெயரளவில் முதல்வர்; ஆளுவது பா.ஜ.க. அதுவும், பீகார் - "மகாராட்டிரம்" மாதிரி ஆகிவிடக் கூடாது என்பதால், ஆர்.எஸ்.எஸ். - பிரதமர் மோடியின் வியூகம் - 'வித்தை' இது!


கேள்வி :  மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட அறிவியல் படித்த  மேதைகளே மாந்திரீகத்தை நம்பி தங்கள் வீட்டின் முன் செப்புத் தகடுகளை தொங்க விடுகிறார்களே! உண்மையிலேயே அவர்களுக்கு அதன் மீது நம்பிக்கை இருக்குமா?


- சா.அருண்குமார், அரியலூர் 


பதில் : படிப்பிற்கும், அறிவுக்கும் சம்பந்தமில்லை. இம்மாதிரி பேர்வழிகளிடம் அறவே பகுத்தறிவு கிடையாது!


கேள்வி :  மேனாள் தேர்தல் ஆணையர் குரேஷி, தாம் ஓய்வு பெற்றபின் மின்னணு வாக்கு எந்திரம் குறித்து சந்தேகம் எழுப்புகிறாரே?


- தென்றல், சென்னை


பதில் : கெட்ட பின்புதான் ''ஞானம்!'' பதவியில் இருக்கும்போது வருவதில்லை; அவ்வளவு பரந்த ''பொதுநலம்!''


கேள்வி :  திராவிட இயக்க ஆட்சி ஏற்பட்டு நூறாண்டுகள் நிறைவடையும் நிலையில் இன்னும் திராவிடர்கள் உரிமை கேட்பவர்களாகவே இருக்கக் காரணம் என்ன?


- விஜயகுமார், பிலாக்குறிச்சி


பதில் : நம்மை பிரித்து விபீடன், அனுமார், சுக்கிரீவன் பட்டாளமாக்கிப் பயன்படுத்தும் ஆரியத்தின் பிரித்தாளும் வியூகமே மூலக் காரணம் ஆகும்!


''எல்லோரும் அங்கே தனித்தனிதான். ஏக மனதாகி அவர் நம்மை எதிர்ப்பதெங்கே?" என்று கும்மாளம் போடும் குள்ளநரிகள்!


கேள்வி : மாநில அரசு புதிய கல்விக் கொள்கை குறித்து கொள்கை முடிவு எடுப்பதற்குள்ளாகவே உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு தொடர்ந்து சுற்றறிக்கை அனுப்பி மிரட்டுகிறதே இதற்கு என்னதான் தீர்வு?


- அன்புமணி, காட்டுமன்னார்கோயில் 


பதில் : இறுதியாக மக்கள் மன்றம்தான் ஒரே நம்பிக்கை! காரணம், நீதிமன்றங்களில் வழக்குகள் ஊறுகாய் ஜாடியில் ஊறுகின்றனவே!


கேள்வி :  சுயமரியாதை இயக்கம் வட இந்தியாவின் பொதுவுடைமை இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததா? அய்யாவுக்கு ரஷ்யா செல்ல வேண்டுமென்ற எண்ணம் எவ்வாறு ஏற்பட்டது?


- சி.கே.புவியரசன், எண்ணூர்


பதில் : அப்படி ஏதும் இருந்ததில்லை. அப்போது அய்யாவுக்கு ஏற்பட்ட ஆவல். அவர் அதைப்பற்றி அறிந்து, முதலில் கம்யூனிஸ்ட் அறிக்கையை தமிழில் வெளியிட்டார். தனது கொள்கைகளை ஒத்த ஒரு நாடும், அரசும் எப்படி நடக்கிறது என்று பார்த்து, பல மதிப்பீடுகளை உருவாக்கவேண்டும் என்று நினைத்து, அவரே முடிவுக்கு வந்துதான், அவரது சொந்த செலவில் - மற்ற நண்பர்களுக்கும் செலவுக்கு உதவி - ரஷ்யாவிற்கு சென்று சுமார் 11 மாதங்களுக்குமேல் இருந்து, பார்த்து, பிறகு திரும்பியவர்!


 


சிறப்புக் கேள்வி: எழுத்தாளர் ஓவியா


புதிய குரல்கேள்வி  1:  மதிப்பிற்குரிய ஆசிரியர் அய்யா அவர்களே, தாங்கள் தலைவர் பெரியார் அவர்களுடன் பயணத்தை தொடங்கியவர். பெண்ணடிமை ஒழிப்பு என்பது பெரியார் அவர்களின் முக்கிய கனவு. பெரியார் பேசிய பெண் விடுதலை கருத்துகள் பல அவருடைய காலகட்டத்திலேயே நனவாகி, அவரே அந்த விளைவுகளைக் கண்டு மகிழ்ந்தார் என்பது நாமறிந்த உண்மையாகும். பெரியாரின் காலத்திற்குப் பிறகு பெண்கள் சமுதாயம் சந்தித்துவரும் மிகப்பெரிய வளர்ச்சி எது? அதேபோல பின்னடைவு எது என்பது பற்றி தாங்களுடைய கருத்தை அறிய ஆவலுடன் இருக்கிறேன்.


பதில் 1 : மிக்க நன்றி தோழர் ஓவியா அவர்களே!


தந்தை பெரியார் காலத்தில் பெண்ணிய உரிமை - பாலின சமத்துவம் - கொள்கை அளவில் ஏற்கப்பட்டது (முழுமையான ஆணாதிக்கம் ஒழிந்துவிடவில்லை என்றாலும்).


சமத்துவத்தை மறுக்க எந்த ஆணுக்கும் இன்று தைரியமில்லை என்பதும், அய்யா அவர்களது பல விழைவுகள், அவரது காலத்திற்குப் பிறகு Equality - Empowerment என்று பெண்கள் வளர்ச்சி, பதவி, உத்தியோகங்களில் தலைமைப் பொறுப்பு முதல் - நீதி, நிர்வாகம் முதலிய பல துறைகளிலும் வெற்றி பெற்றதோடு,


சொத்துரிமை உள்பட பல உரிமைகள் பற்றிய இதற்கு முன்னால் வராத சட்டத் தீர்ப்புகள் இப்போது வருவதும்!


பின்னடைவு; மனுதர்மத்தைத் தூக்கிப் பிடிக்கும் பூசாரிகளை நம்பும் ஆடுகளாக நமது பெண்மணிகள் இருப்பதும், 33 சதவிகித ஒதுக்கீடு சட்டம் பல பிரதமர்களைப் பார்த்தும் இன்னமும் சட்டம் ஆகாமல் இருப்பதும், அதுபற்றி சிறிதும் கவலைப்படாமல் வாக்களிக்கும் நம் பெண்களின் கவலையற்ற உரிமை மறந்த போக்கு!


கேள்வி  2:  அய்யா அவர்கள் காலத்தில் திராவிடர் கழகத்தினுடைய எல்லைகளை இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்தும் திட்டம் இருக்கிறதா?  ஏனெனில் பெரியாரின் தேவை இந்தியா முழுவதும் இன்று இருக்கிறது.  அய்யா அவர்கள் காட்டும் வழி என்ன?


பதில்  2:  'சுயமரியாதை இயக்கத்தைத் தோற்று வித்ததேன்?'' என்ற கட்டுரையில் (அதாவது சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பே அய்யா தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்டு வெளிவந்த நூல்) "இன்று இது இங்கு துவக்கினாலும், இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கும்" என்று குறிப்பிட்டதோடு, இரண்டு, மூன்று முறை வடபுலத்தில், கிழக்கில் வங்காளத்திலும், மேற்கில் பஞ்சாபிலும், வடக்கில் உ.பி.யிலும், டில்லியிலும் தந்தை பெரியார் அவர்களே சென்று பிரச்சாரம் செய்ததும், அகில இந்திய அமைப்புகள் அய்யாவைத் தலைவராகத் தேர்வு செய்ததும்கூட நடந்தன. ("வடநாட்டில் பெரியார்" சுற்றுப்பயண கட்டுரை நூலில் பதிவாகியுள்ளது).


நம்முடைய காலத்திலும், வருங்காலத்திலும் இது உலகளவில் தேவைப்படுகிற ஓர் இயக்கம்! - அமெரிக்காவில் நிறபேதம், ஜாதிமுறை போன்றவற்றிற்கு எதிராகவும் - ஆப்பிரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் பெரியாரின் மனித உரிமை இயக்கம் - சமத்துவம், சம உரிமை தத்துவங்கள் - பெண்ணிய விடுதலைத் தத்துவங்கள், மூட நம்பிக்கை ஒழிப்பு ஆகியன உலகத் தேவையாகும்.


மதங்கள் - புரட்சிக் கவிஞர் கூறியதுபோல, 'கந்தகக் கூட்டில் கனலின் கொள்ளிகள்' என்பதால், தீவிரவாதம் மதங்களால் உச்சகட்டத்திற்குச் சென்ற பிறகும், தீர்வு பெரியாரியத்தில்தான் இருக்கும். எனவே, 'உலக கிராக்கி' (global demand) பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்கு ஏற்படும். அது மனித குலத்தால் தேடப்படும், தேவைப்படும் தத்துவமாக வளரும் என்பது உறுதி. நம் காலத்தில் அதை பல கண்டங்களில், கிழக்கிலும், மேற்கிலும் வளர்த்து வருகிறோம். வளர்ப்பது நமது முக்கிய பணியாகும்!


Comments