செய்தியும், சிந்தனையும்....!

கவலை அளிக்கும் நிலைதான்!


கட்டாய மத மாற்றத்தைத் தடுக்கும் 'லவ் ஜிகாத்'துக்கு எதிராக உ.பி.யில் அவசர சட்டம்.


மக்கள் வளர்ச்சி - நலன் சார்ந்த சட்டங்கள், திட்டங்கள்பற்றி எல்லாம் பா.ஜ.க. அரசுகள் கவலைப்படுவதில்லை; மாறாக இதுபோன்ற மதம் சார்ந்தவற்றில்தான் கவலை! இந்த நிலை தொடர்ந்தால் பா.ஜ.க.வுக்கே கவலை அளிக்கும் நிலைதான்!


வித்தைகளில் விற்பன்னர்கள்


கேரளப் பஞ்சாயத்துத் தேர்தலில் முதல் முறையாக பா.ஜ.க. சார்பில் முஸ்லிம் பெண் போட்டி.


வித்தைகளையும், தந்திரங்களையும் காட்டுவதில் பா.ஜ.க.வும், சங் பரிவார்களும் கில்லாடிகள் ஆயிற்றே!


திருப்பதி - நிம்மதி!


திருப்பதி வந்து சாமி தரிசனம் முடித்து இந்தியக் குடியரசுத் தலைவர் டில்லி திரும்பினார்.


பரவாயில்லை - வட மாநிலங்களில் இரு கோவில்களில் நடந்த அவமானம் இல்லாமல் நிம்மதியாக ‘தரிசனம்' முடிந்து சென்றது ஒரு வகையில் நிம்மதியே!


நோக்கம்


லக்னோ - டில்லி, மும்பை - அகமதாபாத் தேஜஸ் மிக விரைவு ரயில் வண்டிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.


தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதால், போதிய பயணிகள் வராததால் ரத்தாம். தனியாருக்கு விட்டால் இப்படித் தான் - இலாபம்தானே அவர்களின் நோக்கம்?


நியாயந்தானே!


அமெரிக்காவில் தடுப்பூசி இலவசம் - துணைக் குடியரசு தலைவர் கமலா ஹாரிஸ் அறிவிப்பு.


தடுப்பூசிகள் இலவசமாகப் போடப்படுவதுதான் நியாயம்.


கொல்லைப் புறக்கொள்ளை!


இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.75 ஆயிரம் கோடி வரி மோசடி!


மோசடிக்காரர்கள் வேறு யார்? கார்ப்பரேட் நிறுவனங்கள்தாம். விவசாயி கடன் வாங்கினால் வண்டி, மாடுகள், ஆடுகள் பறி முதல்! கார்ப்பரேட்டுகள் கடன் வாங்கினால் தள்ளுபடி!


அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 'சோஷலிஸ்ட்' என்ற  சொல் பா.ஜ.க.வுக்கு உறுத்துவதால் இந்தக் கொல்லைப்புறக் கொள்ளை.


இரை தேடினால் இரைதான்!


உளுந்தூர்ப்பேட்டை அருகில் இருந்து இரை தேடி வந்த மயில் இறப்பு.


இரை தேடி மயில் வந்தாலும், யானை வந்தாலும் இரையாக வேண்டியதுதான்.


அண்ணா என்பதாலா?


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்ட கலைவாணர் அரங்க நிகழ்ச்சி மேடையின் பின்புறத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்கள் காட்சி அளித்தன - இது 'தினமலர்' செய்தி.


கட்சிக்குப் பெயர் அண்ணா - ஆனால் அண்ணா படம் இல்லாதது  ஏன்? ‘ஆரியமாயை' எழுதியவர் அண்ணா, புராணங்கள்பற்றி தீட்டித் தள்ளியவர், அண்ணா 'தீ பரவட்டும்' பேசியவர் அண்ணா என்பதாலா?


Comments