'தினமலரின்' இறக்குமதி மனுவைக் காப்பாற்ற வரும் வேதாந்த அய்யங்கார்கள்!

* மின்சாரம்மனுஸ்மிருதியில் உள்ள சுலோகங்களை எடுத்துக்காட்டி சூத்திரர்களை வேசிப்புத்திரன் என்கிறதே - பெண்கள் ஆண்களின் ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களைப் புணருகிறார்கள் என்கிறதே என்று சொன்னால் அவற்றை மறுக்க முடியாத கையறு நிலையில் "இப்பொழுதெல்லாம் யாருங்க மனுவை நினைக்கிறார்கள் - எந்தக் காலத்திலேயோ யாராலோ எழுதப்பட்டதை இப்பொழுது ஏன் பேச வேண்டும்?" என்று முன்னேற்றச் சிந்தனையில் இறக்கைகட்டி பறப்பது போல மேதா விலாசத்துடன் பேசும் பார்ப்பனர்கள் உண்டு.பார்ப்பனர்களிலே இன்னொரு வகையினர் உண்டு. இந்த மனுதர்ம சாத்திரமே வெள்ளைக்காரன் எழுதியது - பிரித்தாளும் சூழ்ச்சி என்று உதார் விடுவோர் உண்டு.


 "எத்தனையோ 'மனுக்கள்' இருந்திருக்கிறார்கள். யார் யாரோ எழுதி உள்ளே அவ்வப்போது திணித்து விட்டார்கள்" என்று கூறித் தப்பிக்கும் தர்ப்பைப் புற்களும் உண்டு.


'இவர்கள் சொல்லுவது போல் மனுஸ்மிருதியில் எங்கே இருக்கிறது?' என்று கேள்வி கேட்டு, மனுஸ்மிருதியிலிருந்து ஒன்றிரண்டை எடுத்துக்காட்டி "பார்த்தீர்களா? பார்த்தீர்களா? மனு எவ்வளவு உன்னத கருத்துக்களை உபதேசித்திருக்கிறார்" என்று 'சோ' ராமசாமி போல எழுதிய - எழுதுகிறவர்களும் உண்டு.


ஆனால் ஒன்றை மட்டும் உணரத் தவறக் கூடாது - தவறவே கூடாது! எந்த ஒரு கிறுக்குப் பிடித்த பார்ப்பானும் 'மனு ஒரு குப்பை - அது காலத்துக்கொவ்வாது - கொளுத்தி எரியுங்கள்' என்று சொல்லும் ஒரு பார்ப்பானைக் காட்டுங்கள் பார்க்கலாம்.


திருக்குறள் மனுவும் ஒன்று என்று கூறும் சங்கராச் சாரிகளை, நாகசாமிகளையல்லவா பார்க்கிறோம்.


"திருக்குறளில் அறமாவது - மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம்" என்று கூறும் பரிமேலழகர் என்ற பார்ப்பனரை நாம் பார்க்கவில்லையா?


நீங்கள் கூறும் மனுதர்மம் யார் மொழிபெயர்த்தது  - யார் வெளியிட்டது என்று கேட்டனர். அதற்கான ஆதாரப் பூர்வங்களை எடுத்துக் கூறியாயிற்று (பெட்டிச் செய்தி காண்க).


மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் ஆப்த ஆலோசகர் அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் மனு ஸ்மிருதி பற்றி கூறியதையும் எடுத்துப் போட்டாயிற்று.கடுகு மூக்கின் மூக்கு அளவுக்கு அறிவு நாணயம் இந்த ஆரியப் பார்ப்பனர்களுக்கு இருக்குமானால், நாம் எடுத்துக் கூறியது - குற்றமுடைத்தது -  ஆதாரமற்றது என்று விவாதிக்க வேண்டுமல்லவா - எதிர்த்து எழுதிட முன்வர வேண்டும் அல்லவா?


முடியாது - முடியவே முடியாது!  அவர்களுக்கு நன்றாகவே தெரியும் - அதனால்தான் பந்தை அடிக்க முடியாத கோழைகள் காலை அடிப்பது போல - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் கூறியதைத் திரித்துத் தலைகீழாக்கி, 'அய்யகோ, பெண்களை திருமாவளவன் விபச்சாரிகள் என்று சொல்லி விட்டாரே!' என்று அவதூறு பரப்புகிறார்கள் என்றால், மனு காலத்திலிருந்து, மோகன் பாகவத் காலம் வரை இந்தத் திரிநூல் பார்ப்பனர் தில்லுமுல்லு திருகுதாளத்திலிருந்து விடுபடவேயில்லை என்பது தெரிகிறதா - இல்லையா?


1971  சேலம் மாநாட்டை இப்படி திரித்து வெளியிட்டு மூக்கறுபட்டும் இந்த மனுவாதிகள் திருந்தவில்லையே!


நேற்றைய 'தினமலரில்' கொஞ்ச காலமாக ஆள் அரவம் தெரியாதிருந்த மேனாள் விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் அய்யங்காரை இழுத்து வந்து மனுவுக்கு வக்காலத்து வாங்கச் செய்திருக்கிறது.


தெலங்கானாவில் ஒரு பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற நால்வரை விசாரிக்கச் சென்ற காவல்துறை அதிகாரி அந்த இடத்திலேயே அவர்களை சுட்டுக் கொன்று விட்டார்.


இதுபோல காவல் அதிகாரிகளே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டதை எடுத்துக்காட்டி - அதுதான் மனு நீதியாம் - சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளலாம் என்பது தான் வேதாந்தனாரின் சிபாரிசா? அப்படி என்றால் கொலைக் குற்ற விசாரணை நடத்தப்பட்டதே - அந்த சங்கராச்சாரியார் வரை நீண்டால் ஏற்பார்களா!


சிலப்பதிகாரத்தில் மனுநீதி சோழன் என்று ஒருவன் இருந்திருக்கிறான். (இப்படி ஓர் அரசன் இருந்தான் என்பதற்கு வரலாற்றுச் சான்று கிடையவே கிடையாது)


சிவனுடைய குல முதல்வனாக மனு இருந்தான், மனுநீதி சேதுபதி என்று ஒரு மன்னன் இருந்தானாம்.


இவற்றையெல்லாம் வேதாந்தம் அய்யங்கார் எதற்காக எடுத்துக்காட்டுகிறார்?


மனுஸ்மிருதிக்குள்ள மகத்துவத்தை- ... தூக்கிப் பிடிக்கத்தான்!


கீதை வழிக்காட்டியபடி நாதுராம் கோட்சே காந்தியாரைக் கொன்றான் என்று சொன்னால்,  அது எப்படியோ அப்படித்தானே இதுவும்!


ஆரியம் தன் ஆதிக்க வெறியிலிருந்து அணு அளவும் மாறவில்லை - பைத்தியம் பிடித்த பார்ப்பான்கூட தன் பூணூல் புத்தியை விடவே மாட்டான் என்ற கருத்துதான் மேலும் மேலும் வலுப்படுகிறது என்பது விளங்கவில்லையா? 'தினமலர்கள்' 'துக்ளக்கும்' 'தினமணி'களின் இந்த வக்கிர - வைதிகப் புத்தியைப் பார்த்த பிறகாவது முருகன்கள் திருந்த வேண்டாமா?


மூன்றே மூன்று எடுத்துக்காட்டுகள்: மனுதர்மம் ஒன்பதாம் அத்தியாத்திலிருந்து இதோ:


சுலோகம் 14: மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களைப் புணருகிறார்கள். இது திருமாவளவன் சொன்னதா?  மனுஸ்மிருதி சொன்னதா?


சுலோகம் 17: படுக்கை, ஆசனம்,  அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார். இது மனுநூலா, திருமாவளவன் கூற்றா?


சுலோகம் 19: மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷமுள்ளவர்களென்று அனேக சுருதிகளுஞ் சாஸ்திரங்களுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன. இது மனுஸ்மிருதியா திருமாவளவனின் கை சரக்கா?


இந்த மூன்றுக்கு மட்டும் - மான உணர்ச்சி இருந்தால், அறிவு நாணயம் இருந்தால் - பதில் சொல்லட்டும் - அதற்குப் பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்.


வால்முனை (Tail Piece)


கீதை அத்தியாயம் 9 - சுலோகம் - 32: பெண்களும், வைஸ்யர்களும் சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்.


வேதாந்தங்கள் விளக்கட்டும் - 'தினமலர்கள் தெளிவுபடுத்தட்டும்!


டும்! டும்!! டும்!!!


Comments