இந்தியாவில் வேலையின்மை 6.98 விழுக்காடாக அதிகரிப்பு

புதுடில்லி,நவ.4, இந்தியாவில் வேலையின்மை விகிதமானது, 2020 அக்டோபரில், 6.98 விழுக்காடு என்ற அளவிற்கு அதிகரித்து இருப்பதாக இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மய்யம் (Centre for Monitoring Indian Economy) தெரிவித்துள்ளது.


ஆண்டு துவக்கத்தில் வேலையின்மை விகிதம் மிக அதிகமாக இருந்தது. இதற்கு கரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட விஷயங்கள் காரணம் என்றாலும், பொதுமுடக்கத் தளர்வுகளுக்குப் பின்னால், இந்த விகிதமானது படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால், செப்டம்பரைக் காட்டிலும், தற்போது அக்டோபரில் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் வேலையின்மை 6.67 விழுக்காடாக இருந்த நிலையில், அக்டோபரில் 1.04 விழுக்காடு அதிகரித்து 6.98 விழுக்காடாக உயர்ந்துள்ளது. விவசாயத் துறையில் வளர்ச்சி காணப்பட்ட போதிலும், அக்டோபரில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக கூறும் சிஎம்அய்இ,  இந்தக் காலத்தில், நகர்ப்புற வேலையின்மை விகிதம் 7.15 விழுக்காடாக குறைந்துள்ளதாகவும், இது செப்டம்பரில் 8.45 விழுக்காடாக இருந்தது என்றும், கிராமப்புற வேலையின்மை விகிதம் 6.90 விழுக்காடாக குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.


Comments