கடவுளைக் கும்பிடச் சென்று பனியில் சிக்கிக்கொண்ட சாமியார் முதல்வர்

அரித்துவார், நவ. 18- குளிர்காலம் தொடங்கி விட்டதால் உத்தர காண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவில்  மூடப்பட்டுள்ளது.


நிறைவு நாள் பூஜையில் கலந்து கொள்ள உத்தரப்பிரதேச முதல்-அமைச்சர் சாமியார் ஆதித்ய நாத்தும், உத்தரகாண்ட் முதல்-அமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்தும் ஞாயிற்றுக்கிழமை கேதார் நாத் சென்றிருந்தனர்.


சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெற இருந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, இருவரும் பத்ரிநாத் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கேதார்நாத்தில் ஞாயிறு முதல்  காலையில் இருந்து இடை விடாது மழை கொட்டியதுடன், கடும் பனிப்பொழிவும் இருந்தது.


இதனால் இரண்டு முதல்-அமைச்சர்களும் தாங்கள் தங்கி இருந்த விருந்தினர் மாளிகையை விட்டு வெளியே வர இயல வில்லை. சுமார் எட்டு மணி நேரம் ஆதித்யநாத்தும், ராவத்தும் கேதார்நாத்தில் முடங்க நேரிட்டது.


எங்கே போனது கடவுள் சக்தி?


இங்கிலாந்திலிருந்து கடவுளர் சிலைகள் மீட்பு


நாகை, நவ. 18- நாகை மாவட்டம் பொறையார் ஆனந்தமங்கலம் கோயிலில் 1978ஆம் ஆண்டு ராமன், சீதை, லட்சுமணன் ஆகிய 3 அய்ம்பொன் சிலைகள் திருடப்பட்டு இருந்தன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சிலைகள் சுமார் 42 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் மீட்கப்பட்டன. இங்கிலாந்தில் மீட்கப்பட்ட தமிழக கோயில் சிலைகள் இன்று டில்லியில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. டில்லி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் சிலைகளை தமிழகம் கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்


100 விழுக்காடு கொள்ளளவை எட்டிய 102 ஏரிகள்காஞ்சிபுரம், நவ. 18- காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 102 ஏரிகள் 100விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன என பொதுப் பணித்துறை தகவல் அளித்துள்ளது.


காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மொத்தமுள்ள 909 ஏரிகளில் 102 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 191 ஏரிகள் 75 விழுக்காடும், 250 ஏரிகள் 50விழுக்காடும், 174 ஏரிகள் 25 விழுக்காடும், 189 ஏரிகள் 25 விழுக்காடு குறைவாகவும் நிரம்பியுள்ளன.


Comments