மதத்தால் விளையும் விபரீதங்கள்!

மும்பைக்கு அருகில் பிவாண்டி என்ற பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் ஒரே மரத்தில் மூன்று இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர். விசாரணையில் இவர்கள் அமாவாசை அன்று செத்தால் ஆவியாக(பேயாக) மாறி அனைத்தையும் அனுபவிக்க முட்டாள்தனமாக ஆசைப்பட்டு தற்கொலை செய்துகொண்டனர்  என்பது தெரியவந்துள்ளது.


பிவாண்டி சாபூரைச் சேர்ந்த நிதின் பேரே (30). இவர் மந்திரம், சூனியம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை கொண்டவர். தனது வீட்டிலேயே சிறிய கோவில் ஒன்றைக் கட்டி இரவு பகலாகப் பூஜைகள் நடத்தி வந்தார்.


இவருக்குச் சீடர்களாக மகேந்திர துபேளே (25) முகேஷ் காயுட் (32) போன்றோர் இருந்தனர். தீபாவளி அமாவசை அன்று தொடர்ந்து இரவு முழுவதும் பூஜை செய்த மூவரும் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறினர்.


அதன் பிறகு அவர்கள் வரவே இல்லை. இது தொடர்பாக அவர்களது உறவினர்கள், பல இடங்களில் தேடிப்பார்த்து பின்னர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.


காவல்துறையினரும் மூவரின் வீட்டிலும் விசாரணை நடத்தினர். அதில் நிதின் பேரே என்பவர் மாய மந்திரம் போன்றவற்றில் கைதேர்ந்தவர் என்பதும், மற்ற இருவரிடமும் அமாவசை அன்று பூஜைசெய்தால் செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும் என்று கூறியதும் தெரிய வந்தது.


நிதின் வீட்டில் இருந்து மந்திரம் தொடர்பான பல புத்தகங்களைக் காவல்துறையினர் கைப்பற்றினர்.


இந்த நிலையில் பிண்டியில் இருந்து சிறிது தொலைவில் உள்ள சந்தா என்ற கிராமத்திற்கு அருகில் மாடு மேய்க்கச்சென்ற ஒருவர் வனத்தில் உள்ள நாவல்மரத்தில் மூன்று உடல்கள் தொங்குவதைக் கண்டு உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.


நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் பிணங்கள் தொங்கும் இடத்திற்கு கீழே யாகம் நடத்தி பூஜை செய்ததற்கான அடையாளங்களைக் கண்டு பிடித்தனர்.


மேலும் அங்கு நான்காவதாக ஒரு தூக்குக் கயிறு ஒன்று இருப்பதையும் அதில் எந்த உடலும் இல்லாததைக் கண்டனர்.


இது தொடர்பாக நிதினின் மனைவியிடம் நடத்திய விசா ரணையில் அவர் ஆவிகள் குறித்து அதிகம் பேசியதாகவும், ஆவியாக மாறினால் அனைத்து செல்வத்தையும் அடைந்து விடலாம் என்று அடிக்கடி தன்னிடம் பேசியதாகவும் கூறினார்.


இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் இவர்களோடு இரவு பூஜைக்குச் சென்ற நான்காம் நபர் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் "அமாவாசை நள்ளிரவில் உயிர் பிரிந்தால் நீண்ட காலம் பூமியில் ஆவியாக அலையலாம் என்றும், ஆவியாக வாழ்ந் தால் அனைத்து செல்வத்தையும் பெற்று அனுபவிக்கலாம் என்றும் கூறி எங்களை அழைத்துச் சென்றனர். இரவு பூஜை செய்த நிதின் பேரே நள்ளிரவில் எங்களை மரத்தில் ஏறித் தூக்குக் கயிற்றைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு குதிக்கக் கூறினார், அவரும் மற்ற மூவரும் தூக்குக் கயிற்றைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு மரத்தில் இருந்து குதித்தனர். ஆனால் எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. ஆகையால் நான் கழுத்தில் இருந்து கயிற்றை அவிழ்த்து மரத்திலிருந்து குதித்து வீடு வந்து சேர்ந்தேன், பதட்டத்தில் கயிற்றை மரத்திலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன், இது குறித்து வெளியே கூறினால் என்னைக் கொலைகாரன் என்று சந்தேகப் படுவார்கள் என்ற நிலையில் நான் வெளியே யாருக்கும் கூறாமல் இருந்துவிட்டேன்" என்றார்.


இவர் கொடுத்த தகவலின் படி அப்பகுதியைச் சேர்ந்த சாயிபாபா கோவில் சாமியார் ஒருவரையும் கைது செய்துள்ள னர். அவர் தனது கோவிலுக்கு வரும் பல இளைஞர்களிடம் இதே போன்று மாய மந்திரம் செய்தால் செல்வந்தராக வாழலாம் என்று மூளைச்சலவை செய்து வந்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதே போல் 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டில்லியில் உள்ள புகாரி என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் வீட்டின் சுவற்றில் ஓட்டை போட்டு 11 குழாய்களை சொருகி வைத்திருந்தனர். அந்த குழாய்களுக்குப் பூஜை போடப்பட்டு இருந்தது, இவர்கள் செத்த பிறகு இந்த குழாய்கள் வழியாக உயிர் வெளியே சென்றால்நேரடியாக மோட்சத்தை அடையலாம் என்ற மூடநம்பிக்கையில் 12 வயது மகன், 19 வயது மகள் மற்றும் மூன்று முதியவர்களை தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டனர். விசாரணையில் அக்குடும்பத் தினர் எழுதிவைத்த நாட்குறிப்பு ஒன்றில் "நாங்கள் அனைவரும் செர்க்கத்திற்குச் சென்று நிம்மதியாக வாழப் போகிறோம் எங்கள் உடல்களை எரிக்கவேண்டாம், விரைவில் நாங்கள் அனைவரும் மீண்டும் பூமிக்குத் திரும்பி வந்துவிடுவோம்" என்று எழுதி வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மதமும், அதன் மூடத்தனங்களும் எந்த அளவு மனித அறிவை நாசப்படுத்துகின்றன, விபரீத முடிவுகளை மேற் கொள்ள உந்தித் தள்ளுகின்றன பார்த்தீர்களா? இதற்கெல்லாம் மூலப்புள்ளி கடவுள் நம்பிக்கை என்பதையும் மறந்துவிடக் கூடாது.


மூடநம்பிக்கையை எதிர்த்து நடத்தும் பிரச்சாரத்தால் மத உணர் வைப் புண்படுத்துவதாகக் கூறும் அரசுகளும் இந்த விபரீதத்துக்கு முக்கியக் காரணமே!


Comments