ஒரே வாரத்தில் 3 சம்பவங்கள் தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம்

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுசென்னை, நவ. 17-  திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது:  தமிழகத்தில் ஒரே வாரத்தில்  3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி, மக்களிடையே பதற்றத்தைப் பரப்பி உள்ளது.  வடமாநிலங்களைப் போல,  தமிழகத்திலும் துப்பாக்கிக்  கலாச்சாரம் தலைதூக்கி  வருகிறதோ என்ற அய்யத்தை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை சவுகார்பேட்டையில் 3 கொலைகள், கொலை செய்ய காஞ்சிபுரத்தில் கொலையாளிகள் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துள்ளனர்.   திருக்கோவிலூர் அருகே ஒருவர் கொலை, பழனியில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலத்த காயம். என துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது.  காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் பழனிசாமி, சுயவிளம்பரத்திலும், அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வதிலும் மட்டும் முக்கிய  கவனம் செலுத்துகிறாரா? இவ்வாறு கூறியுள்ளார்


காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 67 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியது


சென்னை, நவ. 17- காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 67 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தமுள்ள 909 ஏரிகளில் 67 ஏரிகள் 100% நிரம்பியுள்ளது என பொதுப்பணித்துறை தகவல் அளித்துள்ளது. 125 ஏரிகள் 75%, 206 ஏரிகள் 50%, 180 ஏரிகள் 25%, 324 ஏரிகள் 25% குறைவாகவும் நிரம்பியுள்ளது.


செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.13 அடியாக உயர்வு


செங்கல்பட்டு, நவ. 17- செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.13 அடியாக உயர்ந்துள்ளது. 2,829 மில்லியன் கனஅடியாக இருந்த ஏரியின் கொள்ளவு 2,889 மி. கனஅடியாக உயர்ந்துள்ளது.


செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது நீர்வரத்து 1086 கனஅடியாக உள்ளது. ஏரியின் நீர்மட்டத்தின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அந்த ஏரி விரைவில் நிரம்ப உள்ளது.


பொது தேர்வு நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை


அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்


சென்னை, நவ. 17- கரோனா பரவல் காரணமாக 2019-20 கல்வி ஆண்டில் 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சியும் வழங்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து, 2020-21 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, இணையவழியில் வகுப்புகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, பொதுத் தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில், இணைய வழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 10, 11, 12ஆம் வகுப்பு களுக்கான பொதுத் தேர்வை சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு 2021 ஜூன் மாதம்தான் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான அட்டவணையை அரசிடம் அரசு தேர்வுகள் இயக்ககம் சமர்ப்பித்துள்ளதாகவும் தனியார் தொலைக்காட்சி சேனல்களில் செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மறுத்துள்ளது.


இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககத்தின் மூத்த அதிகாரிகளிடம் கேட்டபோது, “நடப்பு கல்வி ஆண்டில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பள்ளிகள் திறந்த பிறகுதான், தேர்வு நடத்துவது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்க முடியும். எனவே, சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர்தான் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை’’ என்று தெரிவித்தனர்.


Comments