பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் குழந்தைப் பேறுக்காக சிறுமி நரபலி

கான்பூர், நவ. 18  பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் குழந் தைப் பேறுக்காக ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நரபலி கொடுக்கப்பட்டு இருக்கும் நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் 7 வயது சிறுமியின் உடலொன்று நகருக்கு வெளியே உள்ள முட்புதரில் காவல்துறையினரால் கண்டு எடுக்கப்பட்டது. அந்த சிறுமியின் உடலில் இருந்து நுரையீரல், இதயம் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புக்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தன.  மேலும் உடற் கூறு ஆய்வில் அந்த சிறுமி கூட்டு வன்கொடுமை செய்யப் பட்டுள்ளதும் தெரிய வந்தது.


 யாகம் செய்தால் குழந்தை பிறக்குமாம்


கான்பூர் புறநகரில் வசிக்கும் பரசுராம் இணையர் 20 ஆண்டு களாக குழந்தையின்றி இருந்தனர். இவர்கள் கடந்த 14 ஆம் தேதியன்று சாமியார் ஒருவரைச் சந்தித்து, குழந்தையின்மை குறித்து கூறியுள்ளனர்.


இதற்கு அந்தச் சாமியார் சிறுமி ஒருவரைப் பலியிட்டால் குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து இருவரும் அப்பகுதியில் உள்ள பிராம் மற்றும் அன்சுல் என்ற இரண்டு இளைஞர்களை அணுகி பெண் குழந்தை ஒன்றை நரபலிக்காக பிடித்துக் கொடுக்குமாறும் பணம் தருவதாகவும் என்று கூறி, ரூ.1000 முன்பணமாகக் கொடுத்தனர்.


இதனை அடுத்து அவர்கள் அப்பகுதியில் மாலைநேரம் கடைக்கு சென்று கொண்டிருந்த 7 வயது சிறுமியைக் கடத்தி உள்ளனர்.  மது போதையில் இருந்த இருவரும் அந்த சிறுமியைக் கூட்டு பாலியல் வன்முறை செய்து அதன்பிறகு கொலை செய்துள்ளனர். சிறுமியின் உடலை வெட்டி உள்ளுறுப்புகளை எடுத்து பரசுராம் இணையரிடம் ஒப்படைத்து சிறுமியின் உடலை கோவில் அருகே போட்டுள்ளனர்.


மறுநாள் காலை கோவிலுக்கு வந்த சிலர் கோவில் வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் சிறுமி உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். முதலில் இது ஏதோ ஒரு விலங்கு சிறுமியை அடித்துக் கொன்று உடலை தின்றுவிட்டுப் போட்டுள்ளது என்று நம்பினர்.


ஆனால் காவல் துறை விசாரணையிலும், உடற்கூறு ஆய்விலும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கூர்மையான பொருளால் உடல் அறுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  விசாரணையில்  பரசுராம் இணையர் மற்றும் குழந்தையைக் கடத்திய இருவர் என நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த நிகழ்வு மீண்டும் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது. அம்மாநில முதல்வர் சாமியார் ஆதித்ய நாத் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை அளித்துள்ளதோடு, இந்த வழக்கின் விசார ணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.


Comments