தஞ்சை ஜாதி ஒழிப்பு ஸ்பெஷல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சட்ட எரிப்புத் தீர்மானம்

அரசியல் சட்டத்தில் கண்டுள்ள மதப் பாதுகாப்பு, மத உரிமை என்பதில் இந்து மதம் என்பதை எடுத்துக் கொண்டால் அது வருணாசிரம தர்மம் என்கிற , பிற வியில் மக்களை ஜாதிகளாகப் பிரித்து அவரவர்களுக்குத் தொழி லையும் கற்பித்து, ஒரு பிறவி உயர்ந்தது முதன்மையானது, மற்றொரு பிறவி தாழ்ந்தது, இழிவானது என்பதான கருத் துகளை அமைத்து,  அந்த அமைப்பைக் காப்பதுதான். மத சுதந்திரம் என்பதாகச் சாஸ்திரங்களிலும் மற்றும் மத ஆதாரங்களிலும் கூறுவதைக் கொள்கையாகவும், நம்பிக் கையாகவும் கொள்வதை உரிமையாக்குவதாகிறது. இந்த உரிமையானது இந்நாட்டு இந்து பொதுமக்களில் நூற்றுக்கு மூன்று பேர் மேல்ஜாதி, உயர்ந்த பிறவி - உடல் உழைப் பில்லாமல் இருந்து கொண்டு மற்றவர் உழைப்பில் சுக வாசிகளாக வாழ்வதென்றும், நூற்றுக்குத் தொண்ணூற்று  ஏழு பேர்களான மக்களைக் கீழ்ஜாதி இழிமக்களென்றும், உடல் உழைப்பு வேலைசெய்து கொண்டு அடிமையாய், பாட்டாளியாய் வாழ வேண்டியவர்கள் என்றும், பின் சொல்லப்பட்ட மக்கள் கல்வியறிவுக்கும், நீதி நிர்வாக உத்தியோகங்கள், பதவிகளுக்கும் தகுதியற்றவர்கள் என்றும் ஆக்குவதாக இருப்பதால், இந்த மதக்காப்பாற்று உரிமை கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும் என்பது அவசியம் என்றும் இம்மாநாடு கருதுகிறது.


இந்தக் காரியங்கள் சாதாரணமானத் தன்மையில் மாற்றப்படாவிட்டால் எந்தவிதமான முறையைக் கண்டா வது மாற்றித்தரும் படிச் செய்யவேண்டியது பொதுமக் களின் இன்றியமையாத கடமை என்று இம்மாநாடு கருதுகிறது.


 வோட்டுரிமை இல்லாமலும் மற்றும் இந்த அரசியல் சட்டமானது பொதுஜன சரியான தேர்தல் முறை இல் லாமலும் பொறுக்கி எடுத்துக் கொள்ளப்பட்டவர்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபையினால் வகுக்கப்பட்ட சட்டமாதலாலும், இந்தச் சட்டத்தைத் தயாரித்த ஆறு பேர்களில் பெரும்பான்மையானவர்கள் பார்ப்பனர்கள் ஆதலாலும் பார்ப்பனர் முஸ்லீம், பஞ்சமர் ஆகியவர் களைத் தவிர்த்த பொதுஜனத் தொகையில் நூற்றுக்கு எழுபத்தைந்து பேர்களாயுள்ள சூத்திரரென்று ஆக்கப் பட்டிருந்த பெருங்குடி மக்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லாத ஒரு சட்டம் செய்யும் குழுவைக் கொண்டு இச்சட்டம் வகுக்கப்பட்டிருந்தாலும் இந்தச் சட்டமானது நான் காம் ஜாதி என்றும் கூறப்படுகின்ற மக்களைக் கட்டுப்படுத் தத்தக்கதாக ஆகாது என்று இம்மாநாடு கருதுகிறது.


இப்படிப்பட்ட காரணங்களால் இந்த நாட்டுப் பெருங்குடி மக்களுக்கு அமைப்பு, ஜாதி, மதம் ஆகியவை காரணமாக நீதி சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவை அளிக்கப்படாததாயிருப்பதால் இவைகளை முன்னிட்டு, இந்த அரசியல் சட்டம் இந்நாட்டுப் பெருங்குடி மக்களுக்குக் கேடானது என்று கருதுவதால் இக்கேடு களுக்கு ஒரு தெளிவான பரிகாரமோ இன்றுமுதல் 15 நாள் வாய்தாவுக்குள் இந்த அரசாங்கம் மக்களுக்கு அளிக்கா விட்டால், இந்த அரசியல் சட்டத்தை எதிர்த்து ஒழிக்கும் முயற்சியின் அறிகுறியாக 1949 நவம்பர் 26ஆம் தேதி என்ற அரசியல் சட்ட பிறப்பு நாள் வைத்து, இந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதியன்று மாலையில் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாத திராவிடராலும் இச்சட்டம் நெருப்பிலிட்டுக் கொளுத்தத் தக்கது என்று இம்மாநாடு பொது மக்களுக்குத்தெரிவித்துக் கொள்கிறது.


- 'விடுதலை', 6.11.1957


Comments