செய்தியும், சிந்தனையும்....!

மதம் பிடித்தால் ஆபத்தே!


உ.பி. மதுரா கிருஷ்ணன் கோவிலில் 'நமாஸ்' (தொழுகை) செய்த 4 பேர்மீது வழக்கு. இராமநாதபுரத்தையடுத்த அம்மன் கோவில் ஒன்றில் கிறிஸ்தவ மத வாசகங்களுடன் அச்சிடப்பட்ட திருமணம் நடத்திட அனுமதி மறுப்பு.


நமாஸ் செய்தால் யாருக்கு என்ன கேடு? கடவுளுக்கு மதம் உண்டா? கடவுள் ஒருவர்தான் - பல வடிவங்களில் வழிபாடு செய்யப்படுகிறார் என்று உபதேசம் செய்வது எல்லாம் சுத்த 'அம்பக்கு'தானா?


நாகூர் தர்காவிலும், வேளாங்கண்ணி மாதா கோவிலிலும் இதுபோன்ற சர்ச்சைகள் வருவது இல்லையே, ஏன்?


'மதம் எனும் 'பேய்' பிடியாதிருக்கவேண்டும்' - வடலூர் இராமலிங்க அடிகளார்.


‘பட்ட துயரம்  போதுமடா!'


பகுஜன் சமாஜ் கட்சி- பா.ஜ.க.வுடன் கூட்டணி இனி எந்தக் காலத்திலும் கிடையாது: - மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி.


பட்டதுபோதும் என்ற அனுபவப் பாடமோ!


இதையும் சேர்க்கலாமே!


தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி ராஜஸ்தானில் போராட்டம்.


மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பதையும் சேர்த்துக் கொள்ளக் கூடாதா?


நாய் விற்றக் காசு குரைக்குமா?


'ஆன்லைன்' சூதாட்டத்தால் தற்கொலைகள் நிகழும் அளவுக்கு நிலைமை இருக்கும்போது - அந்தச் சூதாட்டங்கள்பற்றிய விளம்பரங்களில் கிரிக்கெட் விளையாட்டுக்கார்கள் நடிக்கிறார்கள்: - நீதிமன்றம் தாக்கீது.


கிரிக்கெட்டே பணம் காய்க்கும் மரம் - விளம்பரங்களில் நடிப்பதும் அந்த வகையில்தான். நாய் விற்றக் காசு குரைக்கவா போகிறது?


மூடத்தனத்துக்கு அளவே இல்லையா?


மன்னார்குடியை அடுத்த துளசேந்திரபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரும், வேறு நாட்டைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டவருமான கமலா ஹாரீஸ் அமெரிக்கத் துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அவரது குடும்ப வழியைச் சேர்ந்தவர்கள், குலதெய்வக் கோவிலில் வழிபாடு!


ஜாதி, மதம், நாடு இவற்றைக் கடந்து திருமணம் செய்துகொண்ட ஒருவருக்குக் குலதெய்வம் எங்கிருந்து குதித்தது?


குலதெய்வம்தான் தேர்தல் முடிவை நிர்ணயிக்கப் போகிறதா? முட்டாள்தனத்துக்கும், மூடத்தனத்துக்கும் ஓர் அளவே இல்லையா?


முதுகெலும்புள்ள முதலமைச்சர்!


வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் முதலமைச்சரே இன்று தர்ணா!


முதுகெலும்புள்ள முதலமைச்சர். 


புத்தர்முதல் பெரியார் வரை!


ஜமீன் பல்லாவரம் மலையில் இருந்த புத்தர் சிலை உடைப்பு.


புத்தர் முதல் பெரியார் வரை ஆரிய வருணாசிரமத்தின் ஆணிவேருக்கு ஆபத்தை ஏற்படுத்தியவர்கள் ஆயிற்றே - அந்த ஆத்திரம் இன்றுவரை தொடர்கிறது.


Comments