ஜாதி மறுப்பு திருமணம் புரிவோருக்கு ஊக்கத் தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு

ஒடிசா மாநில முதல்வரின் பாராட்டத்தக்க உத்தரவு


புவனேசுவரம்,நவ.3, முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசு, ஜாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கு வசதியாக, இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணையதளம் மூலம், ஜாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகள் விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் ஊக்கத்தொகை பெற முடியும்.


ஜாதி மறுப்பு திருமணங்களை ஊக்கு விப்பதற்காக சுமங்கல் என்ற பெயரில் ஒடிசா அரசால் போர்டல் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திருமணங்கள் சமூக நல்லி ணக்கத்தை ஏற்படுத்த உதவும் என்று பட்நாயக் நம்புகிறார். இந்த இணையதளத்தை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வளர்ச்சி, சிறுபான்மையினர் மற்றும் பிற் படுத்தப்பட்டோர் நலத்துறை உருவாக் கியுள்ளது.


2018 ஆம் ஆண்டில், இதுபோன்ற திருமணங்களுக்கான ஊக்கத்தொகையை பட்நாயக் அரசு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த ஊக்கத் தொகை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தம்பதியினரின் கூட்டுக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். திருமணமான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர்கள் அந்தத் தொகையை எடுக்க முடியும். பயனாளிகளின் வருவாய் வரம்பு எதுவும் இதில் கணக்கிடப்படாது. 2017-18 நிதியாண்டில், 543 தம்பதிகள் இந்த பலனைப் பெற்றனர்.


மாநில அரசு ரூ.2.65 கோடியை ஊக்கத் தொகையாக செலவிட்டது. ஊக்கத் தொகைக்கு தகுதி பெற, திருமணங்கள் செல்லுபடியாகும் வகையில் இந்து திருமணச் சட்டம், 1955இன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். இந்திய அரசமைப்பின் 341ஆவது பிரிவின்படி, வாழ்க்கைத் துணையில் ஒருவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதாவது வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் உயர்ஜாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், மற்றொருவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினராக இருக்க வேண்டும்.


ஊக்கத்தொகை முதல் முறையாக திருமணம் செய்துகொள்பவர்களுக்கு மட்டுமே. இருப்பினும், கணவர் அல்லது மனைவியை இழந்தவர்களும் உதவித் தொகைக்கு தகுதி பெற்றவர்களாவர். ஊக்கத்தொகை நிலம் வாங்குவதற்கோ, தொழிலைத் தொடங்குவதற்கோ பயன்படுத் தப்பட வேண்டும். ஒடிசா அரசு ஒருங் கிணைந்த மற்றொரு இணையதளத்தையும் அறிமுகப்படுத்தியது.


இது தகுதிவாய்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்க உதவுவதோடு உதவித்தொகை பெற சிரமமின்றி அணுகவும் உதவும். மாணவர்கள் 11 லட்சம் பேர் இதன் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த மாணவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதிகள், பழங்குடியினர் மற்றும் பிற பிற் படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


Comments