மருத்துவக் கல்வி: உள் ஒதுக்கீட்டை 10 விழுக்காடாக உயர்த்தி  அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்குக!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனை 10 விழுக்காடாக உயர்த்தி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அந்தப் பலன் சென்றடைய ஆவன செய்யுமாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டண சுமையைத் தாங்க முடியாத நிலையில், மருத்துவக் கல்லூரிகளில் தங்களுக்கான இடத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலையை எழுதிக் கொடுத்தனர் - அவர்களுக்கு மீண்டும் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார் கழகத் தலைவர்.


அறிக்கை வருமாறு:


‘நீட்' தேர்வில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு அரசு பள்ளிகளில்பயின்று வெற்றி பெற்றவர்களில் ஒரு பகுதியினருக்கு அந்த இட ஒதுக்கீடு கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத கொடுமை ஏற்பட்டது; காரணம், தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துதான் மருத்துவப் படிப்பை முடிக்க முடியும்; அங்கு அரசு மருத்துவக் கல்லூரி கட்டணங்களைவிட பன்மடங்கு அதிகம்; தாங்கள் வசதியற்ற, ஏழை, கிராமங்களில் வசிக்கக்கூடிய மற்றும் வாழ்வாதாரத்தில் மிகவும் கீழே உள்ளவர்கள் என்பதால், தாங்கள் விலகுவதாக, மனம் உடைந்து எழுதிக் கொடுத்தனர்.


இப்போது - காலந்தாழ்த்தியாவது, தமிழக அரசே அவர்களது கல்விக் கட்டணத்தை ஏற்கும் என்று முதல்வர் அறிவித்திருப்பது நன்றிக்குரியது என்பதால், அவர்கள் எழுதிக் கொடுத்ததை மாற்றி, அவர்களையும் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி, அவர்கள் நெஞ்சில் பால் வார்க்க வேண்டியது மனிதாபிமான அடிப்படையில் மிகவும் முக்கியமாகும்.


அதோடு, அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு, நீதிபதி பரிந்துரைப்படி 10 சதவிகித உள் ஒதுக்கீட்டை செயல்படுத்திடுவது அவசிய, அவசரமாகும்.


அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளும் பயன்பெறுவது முக்கியம்.


அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி (State Aided) என்பது, நிர்வாகத்தைப் பொறுத்த மாற்றமே தவிர, பாடத் திட்டத்திலோ, தேர்விலோ எந்த மாறுதலும் உள்ளவை அல்ல. சமூகநீதி அந்த மாணவர்கள், பெற்றோருக்கும் கிடைக்கச் செய்வது தான் சுய முரண்பாடற்ற சமூகநீதி செயலாக்கம். இது முக்கியம்!


தமிழக அரசு மறுபரிசீலனை செய்க!


 


- கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


23.11.2020


Comments