ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 30, 2020

ஆசிரியர் விடையளிக்கிறார்


கேள்வி 1: தீண்டாமை ஷேமகரமானது என்று சொன்ன மறைந்த சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை அவமதித்த புஷ்கர் கோவில் நிர்வாகத்தினர், பெண் பத்திரிக்கையாளரைப் பற்றி கேவலமாகப் பொது வெளியில் பேசிய எஸ்.வி.சேகர், ஹைகோர்ட்டை இழிவுபடுத்திய எச் ராஜா - இவர்கள் மீதெல்லாம் இல்லாத நடவடிக்கை  திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மீது மட்டும் பாய்கிறதே ஏன்? - ச.செல்வம், பஹ்ரைன்


பதில்: அவாள் முதுகில் தொங்கும் முப்புரிநூல் - பூணூல் என்பன, திராவிடர் மீது தொங்காததும், ஆர்.எஸ்.எஸ். சதியும் தான் 200% காரணம்!


மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி - ஆட்சியும், அதன் ஆணைப்படி நடக்கும் ‘சூத்திரர்களின்’ அடிமை போன்ற ஆட்சியும்தான் இங்கு நடைபெறுகிறது. அதனால் தான், வடநாட்டில் ஒரு சங்கராச்சாரியார் முன்பு இதற்காகவே கைது செய்யப்பட்ட வரலாறும் உண்டே!


கேள்வி 2: கொரோனா வைரஸ் அய்ந்தாவது ஊரடங்கு தொடர்ந்தால் இரண்டு மாதத்திற்கு மேல்வேலை இல்லாமல் கஷ்டப்படும் தமிழக மக்களுக்கு தமிழக அரசு உதவி செய்யுமா?       - அ.தமிழ்க்குமரன். ஈரோடு. 


பதில்: அய்ந்தாவது ஊரடங்கு தொடர்ந்தால் அதுபோன்று கிடைத்தால் ஒழிய, அடித்தட்டு நடுத்தர வர்க்கங்கள் வாழ முடியாத நிலை ஏற்படுவது உறுதி!



கேள்வி 3: ஈழ விடுதலைப் போராட்டத்தில் திராவிடர் கழகத்தின் பங்கு பற்றி விடுதலையில் தொடர்கட்டுரை வர வாய்ப்பு உள்ளதா?   - கருணாகரன், குன்னூர். 


பதில்: தொடர் கட்டுரைக்கு சில சேகரிப்புகள், எல்லாம் பேராசிரியர் நம்.சீனிவாசன் போன்றோரிடம் உண்டு - ஏற்கெனவே வைத்திருக்கிறார். செய்யலாம், நல்ல யோசனைக்கு நன்றி.


கேள்வி 4: இட ஒதுக்கீடு, மதச்சார்பின்மை கொள்கைக்காக ஆட்சியையே பலி கொடுத்த பிரதமர் வி.பி.சிங், ஜனநாயகத்தைக் காக்க ஆட்சியையே பறி கொடுத்த முதல்வர் கலைஞர் - இன்று இவர்களைப்போல் காணமுடியாததற்கு என்ன காரணம்?      - நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர். 


பதில்: கொள்கையை முன்னால் வைத்து பதவிகள் - அவ்ற்றை ஒரு வழி முறையாக எண்ணியவர்கள் அவர்கள்! ஆனால் இன்று, பல அரசியல் கட்சித் தலைவர்கள் எடுத்தவுடனேயே முதல்வர் பதவியில் தானே குறி - அதுதான் வேறுபாடு! அதனால் கொள்கைகளைக் கொண்டவர்களைக் கண்டுபிடிப்பது, அமாவாசையில் நிலவைத் தேடுவதாக அமைந்து விடுகிறது - என்ன செய்ய?


கேள்வி 5: இந்துமத ஜாதிமுறையும், அதன் ஆதார நூலான மனுஸ்மிருதியும் இருபத்தோராம் நூற்றாண்டான இன்றும் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு அடிப்படையாக உள்ளனவே! சாமானிய மக்களுக்கு சமநீதி கிடைக்க என்னதான் செய்வது?  - குடந்தை க. குருசாமி 


பதில்: விழிப்புணர்வு ஏற்பட்டு, ஒற்றுமையுடன் ஓரணியில் நின்று போராட ஆயத்தமாக வேண்டும்!


கேள்வி 6: அன்று கால்கடுக்க நீண்ட வரிசையில் நின்று பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வர வாக்களித்த வட மாநிலங்களை சேர்ந்தவர்கள். இன்று, நடை தளர்ந்து உயிரை  பிடித்துக் கொண்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்ற அடைமொழியுடன் பரிதாபகரமாக இரயில், பேருந்து நிலையங்களில் அகதிகள் போல் காத்துக் கிடக்கிறார்களே, இதுதான், அவர்களுக்கு பிரதமர் மோடி காட்டும் நன்றி விசுவாசமா? - மன்னை சித்து , மன்னார்குடி - 1


பதில்: இதே கேள்வியை இப்போது வேறு மொழியில் உச்சநீதிமன்றத்தின் சில நீதிபதிகளும், புலம் பெயர்ந்த தொழிலாளர் பற்றி தாமே முன்வந்து எடுத்த வழக்கில் - (அதுவும் மூத்த வழக்குரைஞர்களின் அறிக்கைக்குப் பின்னர்) கூறியுள்ளனர். மக்கள் எப்போது தீர்ப்பளிப்பார்களோ அப்போது இந்தக் கொதிநிலைக்கு விடை கிடைக்கும் என்பது உறுதி!


கேள்வி 7: இன்றைய இளைஞர்கள் தங்கள் வாழ்க்கைப் பாதையை சுயநலத்தின் அடிப்படையில் அமைத்துக் கொள்கிறார்களா? பொதுநலம் கருதுகிறார்களா? எப்படி இருக்க வேண்டும் என்று தாங்கள் கருதுகிறீர்கள்?     - முகிலா, குரோம்பேட்டை


பதில்: பெரிதும் தங்கள் நலம் பற்றி மட்டும் சிந்திப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம். சமூகநீதிக்கு, குறைந்தபட்சம் குடும்ப நலத்தையும் முன்னிறுத்திப் பாடுபடும் அளவுக்கு விசால மனம் படைத்தவர்களாக நம் இளைஞர்கள் ஆக வேண்டும். அறத்தினால் வரும் இன்பம், ஈத்துவப்பது, எளிமையாய் வாழ்வது இவைகளை அவர்கள் வாழ்க்கை முறையாக வாழ்ந்து காட்டினால் வரவேற்கத்தக்கது!


கேள்வி 8: விடுதலையில் நீங்கள் எழுதிய தலையங்கத்திற்கு ஏதாவது அய்யா அவர்கள் விளக்கமோ, மறுப்போ எழுதும் நிலை ஏற்பட்டதுண்டா?


     - சா.ஆனந்தகுமார், அரியலூர்


பதில்: என் வாழ்வில் நினைத்து நினைத்துப் பூரிப்பாகும் நிலை அதுதான்! “நான் நினைத்ததை நீங்கள் எழுதியுள்ளீர்கள்” என்று பாராட்டித் தான் உள்ளார். சில நேரங்களில் எழுதி அனுப்புவார்- “இதைப்பற்றி எழுதுக” என்று! அய்யாவின் கடிதம் எனக்குக் கிடைக்குமுன்பே, அதுகுறித்து நான் எழுதியிருப்பேன். அய்யாவும் அதை வெளியூரிலிருந்து படித்து மகிழ்வார்! மீண்டும் எழுதுவார்.


கேள்வி 9: விடுதலையின் ஆசிரியராக நீங்கள் மிகவும் ரசித்துச் செய்யும் பணி எது?   - தென்றல், பெரம்பூர்


பதில்: ‘கரோனா’ என்ற ஊரடங்கிலும் உற்சாகம் குறையாத ‘விடுதலை’ப் பணி - வீட்டுக்குள்ளே நம்மை நாமே பூட்டிக் கொண்ட தவிர்க்க முடியாத நிலையிலும், இப்போதும் ஒத்துழைக்கும் தோழர்களின் அன்பும், பண்பும் மிகுந்த நன்றிக்குரியனவாகும்.


கேள்வி 10: பார்ப்பனியம் தன் வேத, புராணப் புரட்டுகளைத் தக்க வைக்க எல்லா வகையிலும் எப்போதும் முயற்சி செய்து கொண்டே உள்ளதே? அண்மையில் கோல்கேட் என்ற பன்னாட்டு நிறுவனம் இந்தியாவில் வேதசக்தி என்ற புதிய பிராண்ட் பற்பசையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விளம்பரம் பார்ப்பனக் கலாச்சார அடையாளத்துடன் வருகிறது. இத்தகைய பண்பாட்டுப் படையெடுப்புகளைத் தடுக்கும் வழி யாது?    - சிவக்குமார், நாகப்பட்டினம்


பதில்: தனியார் மயம் என்றாலே பார்ப்பன மயம் தானே! தனியார் கம்பெனிகளில் பார்ப்பன மேலாண்மை பெருகி அக்கம்பெனிகளில் ‘அவாள்’ தலைமைத்துவம்! அதுபோல கம்பெனிகளில் மட்டுமில்லை, சிற்சில தொலைக்காட்சி மேலாண்மை உட்பட அப்படி இருப்பதால்தான், இப்படி “மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும்“ முடிச்சு போடுகிறார்கள்!


முன்பு உத்திரமேரூர் எம்.எல்.ஏ. சீரிய பகுத்தறிவாளர் கே.எம்.ராஜகோபால் மேடையில் பேசுவார். நகைச்சுவையாய் ஒரு கேள்வி கேட்டு மக்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைப்பார்.


“ஏண்டா திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும் என்றால் டூத் பேஸ்ட், பிரஷ் போட்டு பல் விளக்கலாமா? இந்தப் பாட்டையே பாடவேண்டுமா எப்பொழுதும்?”


வேதசக்திக்கும், பல் துலக்கும் டூத் பேஸ்ட்டுக்கும் என்ன சம்பந்தம்?


அப்படியானால் தமிழ், சித்த வைத்திய மூலிகைகளால் பயன் இல்லையா?


“ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி” என்ற பழமொழி ரொம்ப காலம் நடைமுறையில் இருந்தும் கூட இப்போதும் வேதசக்திதான் விலை போகுமா?


No comments:

Post a Comment