துணிந்து இறங்கி விட்டோம்! எனவே, திராவிட மக்கள் மேற்குறிப்பிட்ட தன்மைகளில் இருந்து மாறி மற்ற இனத்தவர், மற்ற நாட்டவர் போல் ஆகி, ஒரு மனிதத் தன்மை கொண்ட சமுதாயமாக ஆவதற்கு மிக்க எதிர்நீச்சல் போன்ற கஷ்டமாகும் தன்னலத்தை வெறுத்ததுமான தொண்டு செய்ய வேண்டியது மிக அவசியமாகும் என்பதல்லாமல், இந்தச் சமயம் மிகவும் அவசரமானது என்போம். அதற்கு முக்கியமான இன்றியமையாத ஆயுதம் பத்திரிகையாகும். அதை உத்தேசித்தே இந்தக் காரியத்திற்கும்கூட நமக்குள் இருக்கும் பல வித வேற்றுமை, உதவியற்ற தன்மை, நிதியற்ற நிலை, வேறு பல தடைகள், கஷ்ட நஷ்டங்கள் ஆகியவைகளைக் கூட இலட்சியம் செய்யாமல் விடுதலையைத் துவக்கி விட்டோம். பெரிதும் பாமர, பொதுமக்களையும், இளைஞர்களையும் நம்பியே இதில் இறங்கி இருக்கின்றோம். இது நீடித்து நடந்தாலும் சரி, அல்லது முன்போல் சில நாட்களில் ஒழிந்தாலும் சரி; நம் கடமையைக் கருதியும் இச்சில செல்வர், அறிஞர்கள் ஆதரவு கிடைக்கலாம் என்கின்ற நம்பிக்கையுடனும் இறங்கிவிட்டோம். இச்சமயம் நம் எதிரிகளின் ஏகபோக ஆதிக்கத்தில் அரசியலும் இருக்கும்படியான சமயமாகும். அதனால், அவர்கள் விடுதலையை எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து விடக் கூடும் என்றாலும் நமக்குள்ள ஆசை நமது முக்கிய கடமை நம் மக்களிடத்தில் உள்ள நம்பிக்கை நம் இளைஞர்கள், நம் மாணவர்கள், நம் தாய்மார்கள், நமக்கு ஊட்டிவரும் ஊக்கம், உன் நம்பிக்கை ஒத்துழைப்பைத் தருவதாய்க் காட்டும் அறிகுறி, அவர் களது வாக்குத்தத்தம் ஆகியவைகளைக் கொண்டும் தொடங்கிவிட்டோம்! இதே தொண்டில் இதற்குமுன் இரண்டு மூன்று தடவை வரை முயன்று தோல்வியுற்றா லும் அதைப்பற்றிச் சிந்தியாமல், மறுமுறையும் துணிந்து இறங்கி விட்டோம்.
- தந்தை பெரியார் (விடுதலை தலையங்கம் - 6-6-1946)
விடுதலைக்கு ஜாமீன் விவேகமானதா? மக்கள் சர்க்கார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்க்கார் - மக்களுக்காக உடல், பொருள், உயிர் அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராயுள்ள சர்க்கார் மக்களின் மனப் பண்புகளை நன்கறிந்த சர்க்கார், ஒரு இன மக்களின் சமுதாய முன்னேற்றமன்றிப் பிறிதொன்றையும் குறிக்கோளாகக் கொள்ளாது பணிபுரிந்து வரும் விடுதலைக்கு ஜாமீன் கேட்பதை விவேகமுடைய செயலென்றோ, விரும்பத்தக்க முறையென்றோ எவரும் கூறமாட்டார்கள்.
- அறிஞர் அண்ணா (திராவிட நாடு, 27-6-1948)
தந்தை பெரியார் அவர்கள், தமது பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தமிழ்ச் சமுதாயத்தில் பரப்புவதற்காக உருவாக்கிய படைக்கலன் “விடுதலை” நாளேடு. அதனைத் தொடர்ந்து நடத்துவதில் பெரிதும் இடர்ப்பாடுகளைச் சந்தித்த தந்தை பெரியார் அவர்கள், ஒரு காலகட்டத்தில் அவ்விதழை நிறுத்திவிடலாமா என எண்ணினார். அவ்வேளையில், அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்றவர் இளவல் வீரமணி அவர்கள். இதுகுறித்து, தந்தை பெரியார் அவர்கள் 6.6.1964 அன்று, “விடுதலை” இதழில் எழுதிய தலையங்கத்தில்,
“இனி, “விடுதலை”க்கு உண்மையான பிரசுரகர்த்தாவாகவும், ஆசிரியராகவும் வீரமணி அவர்கள்தான் இருந்து வருவார். விடுதலையின் 25வது ஆண்டுத் துவக்கத்தில் “இலட்ச ரூபாய்களை” “விடுதலை” நடப்புக்காகச் செலவிட்டு, நஷ்டமடைந்த நிலையில், இதனை ஏற்க முன்வந்த வீரமணி அவர்களது துணிவையும், தியாகத்தையும், சுயநலமற்ற தன்மையையும் கருதி, “விடுதலை” வீரமணி அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது” -என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்று திரு.வீரமணி அவர்கள் “விடுதலை” நாளிதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றது முதல் இன்றுவரை, அது, தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் வளர்ப்பதில் கூரிய போர்வாளாகவே திகழ்ந்து வெற்றி கண்டுள்ளது. இந்த வெற்றிக்கு முழு முதல் காரணமாகத் திகழும் தமிழர் தலைவர் திரு. வீரமணி அவர்களைப் பெரிதும் பாராட்டுகிறேன். - முத்தமிழறிஞர் கலைஞர், 27.5.2009
No comments:
Post a Comment