இதுவரை எனக்குப் புத்தகங்கள்
படிக்கும் பழக்கம் இல்லை. கைபேசியைப்
பயன்படுத்தியும், இணையத்தைப் பயன்படுத்தியும் படித்துக் கொண்டு இருந்தேன். இந்நிலையில் கொரானா தொற்றின் காரணமாக ஊரடங்கு விடப்பட்ட இந்த 21 நாட்களில், அப்பாவின் அறிவுறுத்தலினால் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். அப்படிப் படித்த புத்தகங்களில் ஒன்றுதான் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ.இறையன் எழுதிய 'இல்லாத ஹிந்து மதம்' ஆகும். இதுவரை, கடவுள் என்று ஒன்று இல்லை, மதம் வேண்டாம் என்று மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகுதான், இந்து என்ற ஒரு மதமே இல்லை என்பதை அறிந்தேன்.
இந்நூலில் மதங்களைப் பற்றி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. இதில் பல முக்கியத் தலைவர்கள், ஹிந்து மதம் பற்றிக் கூறியவைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. கௌமாரம், சங்கம், காணபத்தியம், சைவம், வைஷ்ணவம், சாக்தம் இவைகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து இன்று ஒரு மதமாக கூறப்படுகிறது. பண்டைய வரலாற்று நூல்களிலோ, தொல்காப்பியம், சிலப்பதிகாரம் , மணிமேகலை போன்ற இலக்கியங்களிலோ ஹிந்து மதத்தைப் பற்றி குறிப்பிடப்படவே இல்லை என்பதையும் இதனைப் படித்து தெரிந்து கொண்டேன்.
"யார் கிறிஸ்தவன் அல்லனோ, யார் முகமதியன் அல்லனோ, யார் பார்சியன் அல்லனோ, மற்ற அனைவருமே இந்து என்ற ஒரு போர்வையைப் போர்த்தி உள்ளனர். புத்த மதம், சமண மதம், கிறித்துவ மதம், முகமதிய மதம் என்பதைப் போன்று இந்து என்ற ஒரு மதம் தோன்றியதே இல்லை"(பக்கம் 35)
ஹிந்து என்ற வார்த்தையே தமிழ் சொல் அல்ல என்பதை முதலில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார் தமிழர் தலைவர்.
இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, மேலும் பல புத்தகங்களைப் படிக்கும் ஆர்வம் வந்துள்ளது.
- வ.ம.வேலவன், பெரம்பூர், சென்னை
No comments:
Post a Comment